மருத்துவர் ராமதாஸ் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு ஏன்? ஆட்சியில் பங்கு! அன்புமணி ராமதாஸ் துணை முதல்வரா?
நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றதையடுத்து ஆளும் தரப்பிற்கு கிடைத்த நம்பிக்கையில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஆளும் அதிமுக தரப்பு தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.
இந்நிலையில் கூட்டணி கட்சியான பாமக சார்பாக அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வரின் வீட்டில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது பாமக தரப்பில் அக்கட்சியின் இளைஞர் அணி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ்,முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் மற்றும் அதிமுக தரப்பில் அமைச்சர்கள் தங்கமணி,எஸ்.பி.வேலுமணி போன்றோரும் உடனிருந்தனர்.
இந்த சந்திப்பின் போது அண்மையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மாமனார் மறைந்ததற்கு மருத்துவர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சந்திப்பின் பொது தமிழக அரசியல் நிலவரம் குறித்து பல்வேறு விசயங்கள் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இது மட்டுமல்லாமல் சமீபத்தில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குனேரி சட்டமன்ற இடைதேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளதை போல விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல் மற்றும் அதன் பிறகு வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
குறிப்பாக விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெறுவதற்கு பாமகவின் வாக்குகளும் மருத்துவரின் பிரச்சாரமும் முக்கிய காரணமாக அமைந்துள்ளதால் அடுத்து வரும் தேர்தல்களிலும் இதே வியூகத்தை பின்பற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.இதில் அதிமுக மற்றும் திமுகவுக்கு இடையேயான போட்டி என்பது மாறி பாமக மற்றும் திமுக இடையேயான போட்டி என்ற நிலைக்கு மாறி காரசாரமான விமர்சனங்கள் மற்றும் விவாதங்களுடன் பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சாரத்தில் திமுக வெற்றி பெற்றால் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதாக கூறியது பற்றியும் இனி வரும் தேர்தல்களில் இது போன்ற வாக்குறுதிகளை சமாளிக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் விவாதித்திருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
மேலும் நடைபெறவுள்ள உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் பாமகவிற்கான தொகுதிகள் எத்தனை என்பது பற்றியும், கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் பாமக ஆதரவளித்ததை போல இல்லாமல் இந்த முறை நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியில் பங்கு மற்றும் அன்புமணி ராமதாஸுக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் போன்ற கோரிக்கைகளும் வைக்கப்பட்டதாக தெரிகிறது. எப்படியாவது அடுத்த முறையும் ஆட்சியை பிடிக்க முயற்சிக்கும் எடப்பாடி பழனிசாமி பாமகவின் கோரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுப்பார் என்றே எதிர்பார்க்கபடுகிறது.
தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலை மற்றும் நடைபெற்ற இடைதேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொள்ள பாமகவின் வாக்கு வாங்கி எந்த அளவிற்கு உதவியது என்பதையெல்லாம் கவனிக்கும் போது பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் இந்த அரசியல் நகர்வு சரியானதாகவே பார்க்கபடுகிறது. மேலும் தற்போதைய சூழலில் ஓபிஎஸ் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்பட்டு வந்தாலும் தேர்தல் நேரத்தில் என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம் அந்த சமயத்தில் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பலத்தை காட்ட பாமகவின் நிலையான வாக்கு வங்கியை நம்பி தான் ஆக வேண்டும் அதற்கு பிரதிபலனாக பாமகவிற்கான முக்கியத்துவத்தை அளிக்கவும் எடப்பாடி பழனிசாமி தரப்பு தயாராகலாம் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.