அதிமுகவின் அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் மரணமடைந்ததை தொடர்ந்து அவைத் தலைவர் யார் என்ற கேள்வி தற்சமயம் வெளிவந்திருக்கிறது. அதிமுகவை நிறுவிய எம்ஜிஆர் பொதுச் செயலாளர், பொருளாளர், போன்ற பதவியை ஏற்படுத்தினார். இதனை தொடர்ந்து அதிமுக அவைத்தலைவர் என்ற பதவியும் உருவாக்கப்பட்டது. அந்த பதவியில் இதுவரையில் முத்துசாமி, வள்ளி முத்து, நாவலர் நெடுஞ்செழியன், பொன்னையன், புலவர் புலமைப்பித்தன், உள்ளிட்டோர் இருந்து வந்தார்கள்.
கடந்த 2007ஆம் ஆண்டு மதுசூதனன் அதிமுக அவைத் தலைவராக பொறுப்பேற்றார். சென்ற 14 வருட காலமாக மதுசூதனன் அவைத் தலைவராக இருந்த சூழ்நிலையில், அவர் உடல்நலக்குறைவு காரணமாக, நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். ஆகவே இந்த பதவி அதிமுகவில் அடுத்து யாருக்கு போக போகிறது என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
எம்ஜிஆர் உயிருடன் இருந்த காலத்தில் இருந்தே கட்சியில் மூத்த தலைவர்கள் அவைத் தலைவராக நியமிக்கப்பட்டு வருகிறார்கள். ஆகவே தற்சமயம் அதிமுகவில் மூத்த தலைவர்கள் அவைத் தலைவராக நியமிக்கப் படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. அதிமுகவில் தனபால், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், உள்ளிட்டோர் ஒருவர் அவைத் தலைவராக நியமிக்கப்படலாம் என்று அதிமுக வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.