சமீபத்தில் தமிழக நிதி அமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் மின்சார துறையும் போக்குவரத்து துறையும் பெரும் கடன் சுமையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.கூடுதல் தகவல் என்னவென்றால் அரசு பேருந்துகள் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 55.15 ரூபாய் நஷ்டத்தில் இயங்குகிறது.இதனால் போக்குவரத்து துறையில் மாற்றம் நிகழ வாய்ப்புள்ளதாக அறியப்பட்டது.
பெண்களுக்கு அரசு பேருந்தில் பயணம் செய்ய இலவசம் என்ற திட்டம் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது.அந்த திட்டம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து போக்குவரத்து துறைக்கு நஷ்டம் சற்றே அதிகரித்தது.மேலும் அரசு பேருந்துகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது.
இதனிடையே சென்னை சைதாப்பேட்டையில் மாநகர பேருந்து சேவையை இன்று தொடங்கி வைத்தார் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்.மேலும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களும் கலந்து கொண்டார்.இதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் பல முக்கிய தகவல்களை கூறினார்.
போக்குவரத்துத்துறை நஷ்டத்தில் செயல்பட்டாலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் அரசுக்கு இல்லை எனவும் தற்போதைய சூழலில் பேருந்து எண்ணிகையை அதிகரிக்க முடியாத நிலைமையில் அரசு உள்ளதாகவும் அவர் கூறினார்.மேலும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரான மா.கண்ணப்பன் சிறப்பாக செயலாற்றுவதாகவும் அவர் பாராட்டு தெரிவித்தார்.
மேலும் பெண் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் போக்குவரத்துத்துறையில் முறைகேடுகள் நடக்காத வகையில் செயல்படுவதாகவும்,நஷ்டத்தை சமாளித்து கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.பொதுமக்கள் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுமா என குழப்பத்தில் இருந்த நிலையில் அமைச்சரின் இந்த பேச்சானது மக்களுக்கு சற்றே ஆறுதலை தந்துள்ளது.மக்களின் அன்றாட பணிகளும் போக்குவரத்தினால் பாதிப்பு ஏற்படாமல் இருக்கிறது.

