உலகக்கோப்பை டி20 போட்டிகள்! ஐசிசி விதித்த கட்டுப்பாடுகள்!
இந்த ஆண்டு உலகக்கோப்பை டி20 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடத்தப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.முதலில் இந்தியாவில் நடத்தத் திட்டமிடப்பட்டு பின்னர் கொரோனாத் தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடத்துவதாக ஐசிசி அறிவித்துள்ளது.உலகக் கோப்பையில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன.
அக்டோபர் 17 அன்று போட்டிகள் தொடங்கி நவம்பர் 14 வரை நடைபெறும்.கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஐசிசி புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் பயோ பபுள் என்ற பாதுகாப்பு நடைமுறையை கடைப்பிடிக்க உள்ளது.இந்த நடைமுறை என்னவென்றால் ஒரு அணிக்கு 15 வீரர்களும் 8 நிர்வாகிகள் மட்டுமே வர வேண்டும்.
இவர்களுக்கான செலவை ஐசிசி ஏற்றுக்கொள்ளும்.ஆனால் இந்த எண்ணிக்கைக்கு அதிகமாக வீரர்களோ நிர்வாகிகளோ வந்தால் அந்த செலவை அவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.இந்தத் தொடரில் சூப்பர் 12 மற்றும் முதல் சுற்று ஆட்டங்களில் விளையாட உள்ள அணிகளின் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டது ஐசிசி.அதன்படி குரூப் 1 மற்றும் குரூப் 2 என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.குரூப் 1இல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா,தென் ஆப்பிரிக்கா,வெஸ்ட் இண்டீஸ் அணிகள் உள்ளன.குரூப் A தகுதி சுற்று வெற்றியாளரும், குரூப் B தகுதி சுற்றின் ரன்னரும் விளையாட உள்ளனர்.குரூப் 2வில் இந்தியா, பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான்,நியூசிலாந்து அணிகள் உள்ளன.குரூப் B தகுதி சுற்று வெற்றியாளரும்,குரூப் A தகுதி சுற்றின் ரன்னரும் விளையாட உள்ளனர்.
இந்த உலகக்கோப்பையில் இப்படியொரு விதிமுறைகளை ஐசிசி அறிவித்ததால் போட்டிகள் வித்தியாசமாக இருக்கும்.இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் போட்டிகளை பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.டி20 உலகக்கோப்பையை மீண்டும் இந்தியா வெல்லும் முனைப்போடு இருக்கிறது.