இஸ்ரேல் போலீசார் செய்த செயல்! வன்மையாக கண்டித்த பாலஸ்தீன அரசு!
சர்ச்சைக்குரிய பகுதிகளான மேற்கு கரைப் பகுதி மற்றும் ஜெருசலேம் நகரங்கள் எங்களுக்கு தான் சொந்தம் என்பதில் பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இரண்டு நாடுகளும் மிகவும் பிடிவாதமாக இருக்கின்றன. அதற்காக அந்த நாடுகளுக்கு இடையில் அடிக்கடி கடுமையான மோதல்களும் தொடர்ந்து வருகின்றன. மேற்கு கரைப் பகுதி மற்றும் ஜெருசலேம் நகரில் உள்ள பாலஸ்தீனர்கள், இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் போது நிகழும் வன்முறைகளில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பாலஸ்தீனர்களை சுட்டுக் கொல்வதும் தொடர்கதையாகி வருகிறது.
அந்த வகையில் மேற்குக் கரைப் பகுதியில் அமைந்துள்ள ஜெனின் நகரில் அண்மையில் இஸ்ரேல் போலீசாரால் பாலஸ்தீன வாலிபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளார். அவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் எல்லை பாதுகாப்பு படை போலீசார், பாலஸ்தீனர் ஒருவரை கைது செய்வதற்காக நேற்று முன்தினம் இரவு ஜெனின் நகருக்கு சென்றுள்ளார்கள். அப்போது அங்கிருந்த கும்பல் ஒன்று போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து இஸ்ரேல் போலீசார் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையில் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த சண்டையின் இறுதியில் பாலஸ்தீனர்கள் 4 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். அதேவேளையில் போலீசார் தரப்பில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே இஸ்ரேல் ஒரு கொடூரமான குற்றத்தில் ஈடுபட்டதாக கூறி இந்த சம்பவத்தை பாலஸ்தீன அரசு வன்மையாக கண்டித்துள்ளதும் குறிப்பிடப் பட்டது.