ஆப்கனுக்கு செல்லுங்கள் எனக் கூறியதால் பரபரப்பு! பா.ஜ.க உறுப்பினர் சர்ச்சைப் பேச்சு!
மத்தியப் பிரதேசத்தில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு சர்ச்சையாக பதில் அளித்துள்ளார் பா.ஜ.க உறுப்பினர் ஒருவர்.பத்திரிக்கையாளர் ஒருவர் பா.ஜ.க உறுப்பினரிடம் பெட்ரோல் விலை உயர்வைக் குறித்து கேட்டார்.அதற்கு பதில் அளிக்காமல் மறுத்துவிட்டார் அந்த உறுப்பினர்.மேலும் அவர் ஆப்கானிஸ்தான் நாட்டில் பெட்ரோல் விலை ஐம்பது ரூபாய்தான் எனவும் அங்கு சென்று பெட்ரோல் போட்டுக் கொள்ளுமாறும் கூறியுள்ளார்.இந்த பதில் அவர்களுக்கு அதிர்ச்சியூட்டியது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள கட்னி பகுதியைச் சேர்ந்த பா.ஜ.கவின் மாவட்ட பிரிவு தலைவர் ராம்ரதன் பாயல்.அவர்தான் இவ்வாறு காட்டமாக பேசியுள்ளார்.மேலும் இவர் தாலிபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தான் சென்று பெட்ரோல் போட்டுக் கொண்டால் உங்களுக்கு விலை குறைவு தான்.ஆனால் அங்கு உங்களுக்கு பாதுகாப்பு இருக்காது.இந்தியாவில் குறைந்தபட்சம் பாதுகாப்பாவது உங்களுக்கு இருக்கிறது என்றும் கூறினார்.மேலும் அவர் நீங்கள் பத்திரிக்கையாளர்தானே நாட்டில் நடக்கும் பிரச்சனைகளை பார்த்துக் கொண்டுதானே உள்ளீர்கள்.இப்போதுகூட மோடிஜி இலவச ரேஷன் பொருள்களை 80 கோடி மக்களுக்கு தந்து கொண்டுள்ளார் என்றும் அவர் கூறினார்.
கொரோனா மூன்றாவது அலை குறித்து கேள்வி கேட்ட போது அவர் ஏற்கனவே இரண்டு அலைகள் வந்துவிட்டதாகவும் இனி மூன்றாவது அலை வரக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.அவர் இந்த பேட்டியைக் கொடுக்கும்போது மாஸ்க் அணியவில்லை மேலும் அவருடன் இருந்த யாரும் மாஸ்க் அணியவில்லை.இவரின் இந்தப் பேச்சானது மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக பீகாரில் பா.ஜ.க உறுப்பினர் ஹரிபூஷன் தாகூர் என்பவர் இந்தியாவில் வாழ்வதற்கு பயமாக உள்ளது என்று சொல்பவர்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு செல்லுங்கள்,அங்கு பெட்ரோல் விலை குறைவுதான்.அங்கு சென்று பார்த்தால்தான் இந்திய நாட்டின் அருமை தெரியும் எனவும் கூறியுள்ளார்.பா.ஜ.க உறுப்பினர்களின் இந்த பேச்சுக்களால் மக்கள் அதிர்ச்சியும் கோபமும் அடைந்துள்ளனர்.