கோவை சிறுமி பலாத்கார வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு உறுதி
கடந்த 2010ஆம் ஆண்டு கோவையைச் சேர்ந்த 11 வயது சிறுமி தனது சகோதரன் 8 வயது சிறுவன் ரித்திக் என்பவருடன் சாலையில் நடந்து சென்ற போது திடீரென இருவரும் கடத்தப்பட்டு, பின்னர் பிணமாக மீட்கப்பட்டனர்
இந்த நிலையில் சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்தனர். இதனை அடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வாடகை கார் ஓட்டுநர் மோகன்ராஜ் என்பவரையும் அவரது நண்பர் மனோகரன் என்பவரையும் கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டிருந்த போதே மோகன்ராஜ் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இதனை அறிந்த கோவை மக்கள் பட்டாசு வெடித்து தீபாவளி போல் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் மனோகரன் மீதான வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் கோவை மாவட்ட நீதிமன்றம் மனோகரனுக்கு தூக்கு தண்டனை அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மனோகரன் மேல்முறையீடு செய்ய, சென்னை ஐகோர்ட்டும் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. மேலும் மனோகரன் தரப்பிலிருந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கை விசாரணை செய்து சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை உறுதி செய்தனர்
கடைசி வாய்ப்பாக மனோகரன் தரப்பில் இருந்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று அந்த சீராய்வு மனு மீதான தீர்ப்பு வெளிவந்த போது அங்கேயும் தூக்கு தண்டனை உறுதியானது. இதற்கு அடுத்ததாக மனோகரனுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு ஜனாதிபதிக்கு கருணை மனு போடுவதுதான். ஆனால் ஜனாதிபதி கருணை மனுவிலும் மனோகரனுக்கு சலுகை கிடைக்காது என்றும், எனவே மனோகரன் தூக்கிலிடப்படுவது உறுதி என்றும் நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன