பாமக தலைவர் G.K மணி மற்றும் திருமாவளவன் இடையேயான சந்திப்பு அரசியல் நாகரிகமா?! கூட்டணிக்கு அச்சாரமா?

Photo of author

By Ammasi Manickam

பாமக தலைவர் G.K மணி மற்றும் திருமாவளவன் இடையேயான சந்திப்பு அரசியல் நாகரிகமா?! கூட்டணிக்கு அச்சாரமா?

சமீபத்தில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பாமக தலைவர் G.K.மணி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் . திருமாவளவனுடன் சிரித்துப் பேசி மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இது பாமக தொண்டர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பாமக தொண்டர்கள் சார்பில் பல்வேறு விமர்சனங்கள் வந்த வண்ணமே உள்ளன.

நேற்று சென்னையில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் “நமக்கான சேட்டிலைட் தொலைக்காட்சி” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் பாமக தலைவர் ஜி.கே மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, மதிமுக துணைப் பொதுச்  செயலாளர் மல்லை சத்யா, இந்திய குடியரசு கட்சி தலைவர் சேகு தமிழரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதில் அனைவரும் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் தமிழக அரசியலில் எலியும் பூனையுமாக எதிரான அரசியலை செய்து வரும் கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பாமக ஆகிய இரண்டு கட்சியின் தலைவர்களும் நேருக்கு நேர் சந்தித்து ஒருவரை ஒருவர் கைகுலுக்கி மகிழ்ச்சியாக பேசிக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது. மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் முதல் சம்பந்தபட்ட கட்சிகளின் தொண்டர்கள் வரை அனைவருக்குமே இந்த சந்திப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் பாமக மற்றும் விசிக என இரண்டு கட்சிகளும் இணைந்து செயல்படும் போது இரண்டு கட்சிகளுக்கும் தேர்தல் முடிவுகள் சாதகமாக அமைந்தது.ஆனால் மருத்துவர் ராமதாஸ் மூலமாக அரசியல் பயின்ற திருமாவளவன் பிரிந்து சென்று அந்த கட்சிக்கும்,குறிப்பாக வன்னியர் சமுதாயத்திற்கும் எதிராக மறைமுகமாகவும்,நேரிடையாகவும் என தரமற்ற செயல்களில் ஈடுபட்டது இரு கட்சியினரின் இடையே இடைவெளியை அதிக படுத்தியது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்த பெரிய கட்சிகளான அதிமுக மற்றும் திமுக தொடர்ந்து இரண்டு கட்சிகளுக்கு இடையேயான பிரச்சினையை இரண்டு சாதிகளுக்கு இடையேயான பிரச்சனையாக கிளப்பி விட்டது. இப்படி தமிழ் சமுதாயத்தில் பெரும்பான்மையாக உள்ள இரு சமூகத்தினரிடையே பிரிவினையை உருவாக்கி அதன் மூலம் தொடர்ந்து மாறி மாறி இரு கட்சிகளும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டன.

இந்நிலையில் பாமக தலைவர் ஜி.கே.மணி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் என இருவரும் நேற்று சந்தித்துக் கொண்ட போது, ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியாக கைகொடுத்து பேசிக்கொண்டார்கள். அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகி சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது.இந்நிகழ்வு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயல்பாடுகளை பிடிக்காமல் இருந்த பாமக தொண்டர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. வழக்கமாக ஒவ்வொரு மேடையிலும் சம்பந்தமே இல்லாமல் பாமகவை சீண்டி கொண்டிருந்த திருமாவளவன் பாமக கட்சியின் தலைவருடன் மகிழ்ச்சியாக பேசியது தமிழக அரசியலில் ஒரு திருப்பு முனையாக அமையம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மக்களவை தேர்தலில் திமுகவுடன் விசிக கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் அக்கட்சி போட்டியிடும் தொகுதிகளை தவிர வேறு எந்த தொகுதியிலும் திருமாவளவன் பிரச்சாரம் செய்ய திமுக தலைமை அனுமதிக்கவில்லை.அப்போதே இது அரசியலில் நடைபெறும் நவீன தீண்டாமை என்ற குற்றச்சாட்டும் வைக்கப்பட்டது. அதையடுத்து தற்போது நடைபெற்ற விக்கரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் கூட திருமாவளவன் அவர்களுக்கு பிரச்சாரம் செய்ய வாய்ப்பு வழங்கவில்லை.குறிப்பாக விக்கிரவாண்டி தொகுதியில் வன்னியர்களுக்கு அடுத்தபடியாக அதிகமாக வசிப்பது தலித் மக்கள் தான் என்ற நிலையிலும் திருமாவளவன் அவர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க திமுக தலைமை அனுமதிக்கவில்லை.

இந்த தேர்தல் பிரச்சாரத்தில் மருத்துவர் ராமதாஸ் ஆரம்பித்த முரசொலி அலுவலகம் அமைந்துள்ள பஞ்சமி நிலத்தை திரும்ப தர வேண்டும் என்ற கருத்துக்கு ஆதரவு அளிக்கும் விதமாக தான் திருமாவளவன் மழுப்பாலான பதிலை அளித்திருந்தார். தொடர்ந்து திமுக தலைமையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை தொடர்ந்து வாக்கு அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தி வருவதும்,விசிக தொண்டர்களை எரிச்சலடைய செய்துள்ளது. மேலும் அதிமுக தலைமையிலான அரசு கவிழும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் செயல்படாத தன்மையால் மேலும் பெரும்பான்மை பெற்று வருகிறது. பாமக மற்றும் தேமுதிக போன்ற கட்சிகளும் அதிமுகவுடன் இணைந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் அந்த கூட்டணியே வெற்றி பெறும் சூழல் நிலவி வருகிறது.

எதிரும் புதிருமாக செயல்பட்ட பாமக மட்டும் விசிக ஒரே கூட்டணியில் இருக்க மாட்டோம் என முடிவு செய்திருந்தனர்.ஆனால் தற்போதைய அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டும்,திமுகவில் தங்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க மறுப்பதாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிமுக கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது என்றே எதிர்பார்க்க படுகிறது. இந்நிலையில் இதற்கு பாமக எதிராக அமைந்து விட கூடாது என்பதை உறுதி செய்யவே G.K.மணி மற்றும் திருமாவளவன் இடையேயான சந்திப்பு நிகழ்ந்துள்ளதாக கருதப்படுகிறது. இந்த சந்திப்பு வருகின்ற உள்ளாட்சி மட்டும் சட்டமன்ற தேர்தலில் அமையவுள்ள கூட்டணிக்கு அச்சாரமா? என்ற ஒரு கருத்தும் நிலவி வருகிறது.