பாமகவால் தான் அதிமுக தோற்றது! சர்ச்சையை கிளப்பும் முன்னாள் அமைச்சரின் பேச்சு
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாமகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.இந்த கூட்டணியின் பலனாக வட மாவட்டங்களில் அதிமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று பலமான எதிர்கட்சியாக சட்டமன்றத்தில் அமர்ந்துள்ளது.இந்நிலையில் அதிமுக மற்றும் பாமக கூட்டணியில் விரிசலை உண்டாக்கும் வகையில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் பேசியுள்ளது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது நடந்த சட்டமன்ற தேர்தலில் சமுதாயத்தின் அடிப்படையில் அதிமுக கூட்டணியை அமைத்ததால் தான் l தோல்வி அடைந்தது.மேலும் இது போன்ற சந்தர்ப்ப சூழ்நிலையால் தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதே ஒழிய மக்கள் செல்வாக்கினால் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
இது மட்டுமல்லாமல் பாமகவுடன் கூட்டணி வைத்ததால் நமக்கு ஒரு சமுதாயத்தினர் ஓட்டு போடவில்லை எனவும் முன்னாள் பத்திரபதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசியிருப்பது அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக சார்பாக உள்ளாட்சி தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.அந்த வகையில் வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கான அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளுடன் உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டமானது வேலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி, ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளர் அதிமுக துணை கொறடா ரவி, வேலூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு, வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன், வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் உள்ளிட்டோர் அங்கு கூடியிருந்த நிர்வாகிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனைகளை வழங்கினர்.
பின்னர் அந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி , “திமுக சந்தர்ப்ப சூழ்நிலையால் தான் வெற்றி பெற்றது , செல்வாக்கினால் அல்ல. செல்லும் இடங்களில் எல்லாம் மக்களிடையே அதிமுகவிற்கு எழுச்சி இருந்தது.ஆனால் சமுதாயத்தின் அடிப்படையில் அதிமுக கூட்டணி அமைந்ததால் ஒரு சமுதாயத்தினர் வாக்களிக்கவில்லை என்று பேசினார்.
அதேபோல் அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெற்ற காரணத்தால் ஒரு சமுதாயத்தினர் வாக்களிக்கவில்லை. இதனால் தான் திமுக ஆட்சியை பிடித்தது என்றும் அவர் கூறினார்.
மேலும் நாம் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கலாம், ஆனால் செல்வாக்கை இழக்கவில்லை. அதனால் நாம் உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் வெற்றி பெறுவோம் என்றும் அவர் அங்கு பேசியுள்ளார்.
ஏற்கனவே அதிமுக கூட்டணியில் உள்ள பாமக திமுகவுடன் நெருக்கம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.உள்ளாட்சி தேர்தல் விரைவில் வரவுள்ள இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கூறியுள்ள இந்த சர்ச்சைக்குரிய கருத்தால் இரு கட்சியை சேர்ந்த தொண்டர்களும் அப்செட் ஆகியுள்ளனர்