விஜயகாந்தின் சிகிச்சைக்காக துபாய் செல்வதற்கு பிரேமலதாவின் பாஸ்போர்ட்டை வழங்குவதற்கு மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி சிகிச்சை பெறுவதற்காக துபாய் சென்றார். சென்னை விமான நிலையத்தில் விஜயகாந்தை அவருடைய உதவியாளர்கள் வீல்சேரில் வைத்து மிக வேகமாக தள்ளிக்கொண்டே போகும் ஒரு காணொளி வைரல் ஆனது. அவருடன் அவருடைய மகன் சண்முகபாண்டியன் மட்டுமே சென்றார். மனைவி பிரேமலதா விஜயகாந்த் அவருடன் செல்லவில்லை, இது குறித்து பல யூகங்கள் எழுந்தன இந்த சூழ்நிலையில், பிரேமலதா விஜயகாந்த் துபாய் சொல்லாமல் இருந்ததற்கு அவருடைய பாஸ்போர்ட் தான் காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அவர் மீது திருநெல்வேலி காவல்துறையினர் கடந்த 2017ஆம் வருடம் தொடர்ந்த குற்ற வழக்கு மறைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து பாஸ்போர்ட் அதிகாரி அவருடைய பாஸ்போர்ட்டை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டு திரும்ப பெற்றுக்கொண்டார். இதனை எதிர்த்து பிரேமலதா சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அந்த சமயத்தில் பிரேமலதா சார்பாக ஆஜரான வழக்கறிஞர் நெல்லை காவல்துறையினர் தொடரப்பட்ட குற்ற வழக்கு குறித்து நீதிமன்றத்திலிருந்து எந்தவிதமான சம்மனும் அனுப்பப்படவில்லை. இந்த வழக்கு குறித்த எந்த தகவலையும் நாங்கள் மறக்கவில்லை, மனுதாரர் தன்னுடைய கணவர் விஜயகாந்தின் சிகிச்சையின் போது உடனிருந்து உதவி புரிய வேண்டி இருப்பதால் அவருடைய பாஸ்போர்ட்டை திருப்பித் தர உத்தரவிட வேண்டும்.
இந்த வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதற்கு தயாராக இருக்கிறோம் என்று வாதிட்டு இருக்கிறார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி பிரேமலதாவின் பாஸ்போர்ட்டை உடனடியாக திரும்ப வழங்குமாறு மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிட்டார் இதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.