தமிழ்நாட்டில் கடைகளில் பணியாளர்களுக்கு இருக்கை வசதி கட்டாயம்! அரசு அதிரடி முடிவு!
தமிழ்நாட்டில் அனைத்துக் கடைகளிலும் நிறுவனங்களிலும் இனிமேல் அனைத்து ஊழியர்களுக்கும் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வது கட்டாயமாகிறது.இந்த சட்டதிருத்தம் விரைவில் நடைமுறைக்கு வர இருக்கிறது.இந்த முடிவை தமிழக அரசு தற்போது எடுத்துள்ளது.தமிழகத்தின் தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி கணேசன் இந்தத் தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் அவர் தமிழகத்தில் கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் நின்றுகொண்டே பணிபுரிவதால் அவர்களது உடல்நிலை மிகவும் பாதிக்கப்படுகிறது.இதனால் அவர்கள் பணியை சரிவர செய்ய முடியவில்லை என்றும் வேலை நேரம் முழுவதும் நின்றுகொண்டே வேலை செய்வதென்பது இயலாத ஒன்றாக பணியாளர்களுக்கு இருக்கிறது எனவும் அவர் கூறினார்.வேலையாட்களின் இந்த பிரச்சனையை கருத்தில் கொண்டு பணியாளர்கள் அனைவருக்கும் உட்கார்ந்து கொண்டே வேலை செய்யும் வகையில் அவர்களுக்கு இருக்கைகளை அமைத்துத் தருவது அவசியம் என்று அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் மாநில தொழிலாளர் ஆலோசனை குழுவின் கூட்டமானது 04.09.2019 அன்று நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் முக்கிய கோரிக்கையானது முன்வைக்கப்பட்டது.இந்த கோரிக்கையில் பணியாளர்கள் அனைவருக்கும் இருக்கை வசதி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட குழு உறுப்பினர்கள் ஒருமனதாக இதனை நிறைவேற்ற வேண்டும் எனவும் முடிவு செய்தனர்.
இதனால் தமிழ்நாடு அரசானது 1947ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தினை திருத்தம் செய்ய முடிவு செய்துள்ளது.இந்த சட்டதிருத்தமானது பணியாளர்கள் அனைவருக்கும் இருக்கை தர வேண்டும் என்று வலியுறுத்தும்.மேலும் இது கடைகள் மற்றும் நிறுவனங்கள் அனைத்திற்கும் பொருந்தும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.