தமிழகம் : மாபெரும் தடுப்பூசி முகாம், 9 மாவட்டங்களுக்கு முன்னுரிமை!

0
129

தமிழகம் முழுவதும் மெகா கொரோனாதடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது. 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து வழங்குகிறது. கொரோனா தொற்று3-வது அலை எச்சரிக்கையால் தடுப்பூசி போடும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கேரள மாநிலத்தின் தினசரி கொரோனா தொற்று 30 ஆயிரத்தை கடந்து பதிவாகி வருகிறது. அதனால், கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை (நெகட்டிவ்) சான்றிதழ் அல்லது 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்று கட்டாயமாக்கப்பட்டது. ரயில்நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் கேரளா – தமிழக எல்லைகளிலும் முகாம் அமைத்துள்ள மருத்துவக் குழுக்கள் கேரளாவில் இருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் செப்டம்பர் 12-ம் தேதி (இன்று) மெகா தடுப்பூசி முகாம்களை நடத்துவதாக தமிழக அரசு அறிவித்தது. குறிப்பாக, கேரளா எல்லையை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 100 சதவீத தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் 40ஆயிரம் மையங்களில் கரோனாதடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. வருவாய், உள்ளாட்சி அமைப்புகள், (கிராம மற்றும்நகர), கல்வித்துறை, யுனிசெப், உலக சுகாதார நிறுவனம் மற்றும்பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் தடுப்பூசி பணிகளில் ஈடுபடுகின்றன. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி போடப்படவுள்ளது.

Previous articleவரலாறு காணாத மழை : ஸ்தம்பித்தது தலைநகர் டெல்லி!
Next articleதீபாவளி ரேசில் சிம்பு : ரஜினி , அஜித்துடன் மோதல் !