சம்மதம் தெரிவிக்காததால் காதலியின் கழுத்தை அறுத்து கொலை! தற்கொலைக்கு முயன்ற என்ஜீனியர் பரபரப்பு வாக்கு மூலம்!
நேற்று மாலை நேரத்தில் தாம்பரம் ரயில் நிலைய வளாகத்தில் கல்லூரி மாணவி ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இந்த நெஞ்சை பதைபதைக்க வைக்கும் படுகொலை பற்றி விவரமாக பார்க்கலாம். சென்னையை அடுத்த குரோம்பேட்டை பாரதிபுரம் ரவி நகரை சேர்ந்தவர் மதியழகன்.
இவர் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகள் பெயர் ஸ்வேதா. வயது 19 ஆகும். இவர் சேலையூர் அகரம் தென் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி மைக்ரோ பயாலஜி இரண்டாம் ஆண்டு படிப்பை படித்து கொண்டு, அதோடு கிழக்கு தாம்பரத்தில் உள்ள மற்றொரு தனியார் கல்லூரியில் மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப பட்டப்படிப்பும் படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மதியம் 1.30 மணி அளவில் மாணவி ஸ்வேதா வழக்கம்போல் குரோம்பேட்டையில் உள்ள கல்லூரிக்கு செல்ல மின்சார ரயில் மூலம் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தார். அதன்பின் அங்கு நுழைவாயில் பகுதியில் உள்ள ரயில்வே குடியிருப்பு அருகே வாலிபர் ஒருவருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
யாரும் எதிர்பாராத விதமாக திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஸ்வேதாவின் கழுத்தை அறுத்து விட்டார். அந்த பெண் பாவம் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சுருண்டு கீழே விழுந்தார். உடனே அந்த வாலிபர் அதே இடத்தில் அதே கத்தியால் தனது கழுத்தையும் அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
ரயில் நிலைய வளாகத்தில் பட்டப்பகலில் மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு அந்த வாலிபரும் இவ்வாறு செய்ய முயன்றதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சேலையூர் போலீசார் அங்கு வந்து இரண்டு பேரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர் கழுத்தில் லேசான காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவரது பெயர் ராமச்சந்திரன் என்றதும் 24 வயதானவர் என்பதும் தெரியவந்தது.
இவர் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த ஆதமங்கலத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறினார். என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் மறைமலை நகரில் உள்ள ஒரு கம்பெனியில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார். அப்போது அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் நான் 2019 ஆம் ஆண்டு சென்னையில் இருந்து எனது சொந்த ஊருக்கு ஒரு ரயிலின் மூலம் சென்றேன்.
அப்போது அதே ரயிலில் மயிலாடுதுறையில் உள்ள உறவினர்களை பார்க்க ஸ்வேதா மற்றும் அவரது தாயாருடன் வந்திருந்தார். அப்போது ரயிலில் வைத்து எங்கள் இருவருக்கும் அறிமுகமானது. அப்போதே இருவரும் எங்களின் கைப்பேசி எண்களை வாங்கி கொண்டோம். அதன் பிறகு நாங்கள் அடிக்கடி செல்போனில் பேசிக்கொள்வோம். இதனால் எங்களுக்குள் நெருக்கம் அதிகரித்தது.
அது நாளடைவில் காதலாக மாறியது. இரண்டு ஆண்டுகளாக நாங்கள் காதலித்து வந்தோம். வண்டலூர் பூங்கா உட்பட பல இடங்களுக்கு இருவரும் ஒன்றாக சென்று வந்தோம். அதன்பின் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு முடித்து நான் கடந்த ஆண்டு படிப்பை முடித்த கையோடு மறைமலை நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். ஸ்வேதாவும் கிழக்கு தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மருத்துவ ஆய்வக பட்டயப் படிப்பில் சேர்ந்தார்.
அங்கு சேர்ந்த பிறகு சில மாதங்களில் எல்லாம் என்னுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். நான் அவரை செல்போனில் தொடர்புகொண்ட போதெல்லாம் தொடர்பு கொள்ள முடியாமலேயே இருந்தது. சமீபத்தில் நான் அவரை நேரில் அழைத்து பேசிய போது, அவருடைய செல்போனை ஆய்வு செய்தேன். அதில் ஆண் நண்பர் ஒருவரின் பெயரை பெண் பெயரில் பதிவு செய்து இருந்தார்.
அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது அந்த வாலிபர் நானும் சுவேதாவும், நல்ல நண்பர்கள் அவ்வளவுதான். நீங்கள் நினைப்பது போல் எங்களுக்குள் ஒன்றுமில்லை என்று கூறினார். இதுபற்றி நான் ஸ்வேதாவிடம் கேட்டபோது அவர் என்னிடம் சண்டையிட்டார். மேலும் பலமுறை நான் எடுத்துக் கூறியும் அவர் அதைக் கேட்காமல் நான் கேவலமாக எண்ணம் கொண்டு இருப்பதாக அவள் என்னைவிட்டு விலகிச் செல்ல முயன்றார்.
நான் எவ்வளவு முறை முயன்றும் ஸ்வேதா அதை ஏற்கவில்லை. சரி இருவரும் பிரிந்து விடலாம் என்றும் கூறினார். அதற்கு நானும் சம்மதித்தேன். அதன்படி தாம்பரம் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு வர சொன்னேன். அங்கே வைத்து பேசிக் கொள்வோம் என்றும் கூறினேன்.
எனவே ஸ்வேதாவும் அங்கு ஒரு தோழியோடு வந்தாள். நாங்கள் இருவரும் பேசிய போது எங்களுக்குள் வாக்குவாதம் முற்றியது. இரண்டு ஆண்டுகளாக காதலித்து என்னை விட்டு விட்டு தற்போது விலகி செல்கிறாய் என்று கூறினேன். என்னை ஏற்றுக்கொள் என்றும் அவரிடம் வற்புறுத்தினேன்.
ஆனால் ஸ்வேதா அதைக் கேட்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நான் தயாராக கொண்டு வந்திருந்த கத்தியால் ஸ்வேதாவின் கழுத்தை அறுத்து ஸ்வேதாவை கொலை செய்துவிட்டு பின் நானும் தற்கொலை செய்து கொள்ள கழுத்தை அறுத்துக் கொண்டேன் என்று வாக்குமூலத்தில் கூறி இருந்தார். இதற்கிடையே ஸ்வேதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பட்ட பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் கிழக்கு தாம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சேலையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து ராமச்சந்திரனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றார். அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.