சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கின்ற முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் வீட்டின் முன்பு நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் வருகை தந்திருந்தார். அப்போது அவர் திடீரென்று கையில் வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை திறந்து மேலே ஊற்றிக்கொண்டு தீ குளிப்பில் இறங்கினார்.அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார்கள். இதனைத் தொடர்ந்து 40 சதவீதம் தீக்காயம் உண்டாகி காயமடைந்த அந்த நபரை அவசர ஊர்தி மூலமாக உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்திருக்கிறார்கள் காவல் துறையைச் சார்ந்தவர்கள்.
இந்த சம்பவம் குறித்து தேனாம்பேட்டை காவல் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது, அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேனாம்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் தீ குளிப்பில் ஈடுபட்டவர் தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த மதிமுக பிரமுகர் வெற்றிவேல் என்பது தெரியவந்திருக்கிறது. இவர் உள்ளாட்சி தேர்தலில் மதிமுகவின் சார்பாக சீட் மறுக்கப்பட்டதை தொடர்ந்து சுயேச்சையாக போட்டியிட இருக்கிறார். ஆகவே இவர் தாக்கல் செய்த வேட்பு மனுவை திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்து மிரட்டுவதாக கூறி முதலமைச்சர் இல்லம் முன்னர் தீக்குளித்து இருக்கிறார் அந்த நபர்.
இந்த சம்பவமானது முதலமைச்சர் புறப்பட்ட 30 நிமிடத்திற்கு முன்னர் நடந்திருக்கிறது 40 சதவீத தீ காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்ற அந்த நபரை சந்திப்பதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மருத்துவமனைக்கு விரைந்து இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.