பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லையா? நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
பெண்கள் சமூகத்தில் உயர்ந்து வரும் சூழலில் அவர்கள் பணி புரியும் இடங்களில் பல்வேறு தொல்லைகளுக்கு உள்ளாகும் செய்திகள் அவ்வபோது வெளியாகிய வண்ணமேயுள்ளது.இவ்வாறு பணி புரியும் இடங்களில் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகும் பெண்களில் ஒரு சிலரே தைரியமாக வழக்கு தொடுக்க முன்வருகின்றனர்.
பெரும்பாலோர் நடந்ததை மறந்து இயல்பு வாழ்கையை வாழ தொடங்கி விடுகின்றனர்.இதற்கு காரணம் வழக்கு தொடுத்தால் தங்களின் பெயர் செய்திகளில் வெளியாகிவிடும் என்ற அச்சமே முக்கியமாக கருதபடுகிறது. இந்நிலையில் தான் பணியிடங்களில் பெண்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் வழக்குகள் குறித்த செய்தியை வெளியிட மும்பை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி பெண்களுக்கு ஏற்படும் பணியிட பாலியல் தொல்லை குறித்த வழக்கு சம்பந்தமான செய்திகளை ஊடகங்கள் வெளியிடக்கூடாது. மேலும் நீதிமன்ற அனுமதியின்றி பணியிட பாலியல் வழக்கு குறித்த செய்தியை வெளியிடுவது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் எனவும் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி கவுதம் படேல் தலைமையிலான அமர்வு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.