திமுக ஒரு துரோக கும்பல்! துரைமுருகனுக்கு பதிலடி கொடுத்த முன்னாள் அமைச்சர்!

Photo of author

By Sakthi

சமீபத்தில் வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற திமுகவின் ஒரு ஆலோசனைக் கூட்டத்தில் எம்ஜிஆர் மற்றும் வைகோ உள்ளிட்டோரை துரோகிகள் என்று திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் குறிப்பிட்டு பேசியிருந்தார். இதனை கண்டிக்கும் விதத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் துரைமுருகனுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து உள்ளார்.

திமுகவின் பொதுச் செயலாளராக இருக்கும் துரைமுருகன் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் தங்களுடைய இயக்கம் பல துரோகிகளை கடந்து வெற்றி பெற்றது என தெரிவித்திருந்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர், மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ, உள்ளிட்டோரை துரோகிகள் பட்டியலில் துரைமுருகன் சுட்டிக்காட்டியிருந்தார். இதற்கு அதிமுக தரப்பில் கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு அறிக்கையும் வெளியிடப்பட்டது.

இந்த சூழ்நிலையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அடையாற்றில் இருக்கின்ற சிவாஜிகணேசன் மணிமண்டபத்தில் அமைந்திருக்கின்ற அவருடைய திருவுருவச் சிலைக்கு முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு மணிமண்டபம் அமைத்து பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக அறிவித்து அவருடைய புகழுக்கு புகழ் சேர்த்தது அதிமுக அரசுதான் என புகழாரம் சூட்டியிருக்கிறார்.

பேருந்து நிலையங்களில் அரசு விளம்பரங்களை மற்றும் சிலரின் புகைப்படங்களை வைப்பது தான் திமுக அரசு செய்த சாதனை என்று தெரிவித்திருக்கிறார். புரட்சித்தலைவரை சீண்டுவது நெருப்புடன் விளையாடுவதற்கு சமம் என தெரிவித்த அவர் கருணாநிதியை முதலமைச்சராக அடையாளம் காட்டியது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தான் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இல்லை என்றால் திமுக ஆட்சிக்கு வந்து இருப்பதற்கு வாய்ப்பு கிடையாது. திமுக என்பது ஒரு துரோகி கும்பல் ஜெயகுமார் கடுமையாக விமர்சனம் செய்து இருக்கிறார்.