தொடரும் மாணவிகள் தற்கொலை: ஃபாத்திமாவை அடுத்து திருச்சி மாணவி தற்கொலை
சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தற்போது அரசியல்ரீதியாகி பூதாகரமாகியுள்ள நிலையில் திருச்சியில் ஜார்கண்ட் மாநில மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி கே.கே.நகர் பகுதியில் தனியார் மகளிர் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மாணவி ஜெப்ரா பர்வீன் என்பவர் பட்டப்படிப்பு படித்து வந்தார். ஹாஸ்டலில் தங்கி படித்து வந்த ஜெப்ரா திடீரென நேற்று தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெப்ரா தற்கொலை தகவல் கிடைத்த போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து விசாரணை செய்தபோது, ‘கல்லூரி பாடங்களை ஆங்கிலத்தில் புரிந்து கொள்ள சிரமப்பட்டதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிய வந்துள்ளது
மேலும் மாணவி ஜெப்ரா அடிக்கடி தனது செல்போனை பயன்படுத்தியதால் விடுதி காப்பாளர் திட்டியதாகவும், அதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கல்லூரி மாணவிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இது குறித்து விடுதி காப்பாளரிடமும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் கல்லூரி மாணவிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து வருவதால் மாணவ, மாணவிகளுக்கு கவுன்சிலிங் தேவை என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.