பயங்கரவாதிகள் பலர் சுட்டுக்கொலை! ஜம்மு காஷ்மீரில் தகுந்த பதிலடி!
கடந்த இரண்டு மூன்று மாதங்களாகவே ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் காடுகளின் மூலம் எல்லைக்கு அப்பால் பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகள் பலர் இந்தியாவிற்கு ஊடுருவுவதை தடுக்கும் முயற்சியின் போது நமது ராணுவ வீரர்கள் 9 பேர் வீரமரணம் தழுவினர். அதைத் தொடர்ந்து முப்படைகளின் தளபதி ஜெனரல் பிபின் ராவத் கடந்த 16 ம் தேதி அப்பகுதிக்கு சென்று ராணுவ அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து ராணுவ தலைமைத் தளபதி நரவானேவும் கட்டுப்பாட்டு எல்லைப் பகுதிக்கு வந்து பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டுவது குறித்து ராணுவ அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார். பயங்கரவாதிகள் இரண்டு இரண்டு பேராக ஊடுருவி வந்ததால் அவர்களை பிடிக்க முழு ராணுவ பிரிவினரும் செயல்படும் நிலை அங்கு ஏற்பட்டது.
இதற்கு மாற்றாக பயங்கரவாதிகள் தாங்களாகவே ராணுவத்தின் வலையில் சிக்கும் வகையில் வியூகம் ஒன்றை ஏற்படுத்தினார்கள். அந்த வழிமுறைகளை அவர் வழங்கியதாகவும் கூறப்படுகிறது. பயங்கரவாதிகள் அருகில் உள்ள கிராமங்களில் நுழையும் வகையில் வியூகங்கள் ஏற்படுத்தப்பட்டது. அதன் பிறகு அவர்களை சுற்றி வளைத்தனர்.
தொடர்ந்து அதன் பின் பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தியுள்ளனர். 10 க்கும் அதிகமான பயங்கரவாதிகள் ஊடுருவி இருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களை தவிர எஞ்சியவர்களை தீர்த்து கட்டுவதற்காக என்கவுண்டர்கள் தொடர்ந்து நடப்பதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.