தமிழகத்தில் அக்டோபர் 25 ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு வெளுத்தெடுக்க போகும் கனமழை! வெளியானது முன்னெச்சரிக்கை அறிவிப்பு

0
179
Rain Alert in Tamilnadu
Rain Alert in Tamilnadu

தமிழகத்தில் அக்டோபர் 25 ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு வெளுத்தெடுக்க போகும் கனமழை! வெளியானது முன்னெச்சரிக்கை அறிவிப்பு

தமிழகத்தில் தற்போது ஆங்கங்கே மிதமானது முதல் கனத்த மழை பெய்து வருகிறது.இந்நிலையில் வரும் 26 ஆம் தேதி முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது.இதனால் வரும் திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை 3 நாட்களுக்கு தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்த வரையில் தற்போது தென்மேற்குப் பருவமழையானது விடைபெற்று வடகிழக்குப் பருவமழை ஆரம்பிக்கவுள்ளது. இந்த ஆண்டு பல மாவட்டங்களில் தென்மேற்குப் பருவமழையானது இயல்பை விட அதிக அளவில் பெய்துள்ளதால் பெரும்பாலான அணைகள் நிரம்பி வழிகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு பெருந்துறையில் மட்டும் 9 செமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.

அதே போல திருவண்ணாமலையில் 6 செமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. எடப்பாடி, அன்னூர், முசிறி, பவானி, போளூர், சங்கராபுரம் மற்றும் ராசிபுரம் பகுதிகளில் 4 செமீ மழையானது பதிவாகியுள்ளது. குமாரபாளையம், கொடைக்கானல், ஆத்தூர், மேட்டூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், சாத்தூர், மன்னார்குடி மற்றும் கமுதி பகுதிகளில் 1 செமீ வரை மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் லட்சத்தீவு பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் இன்று வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல் மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், தமிழகத்தின் மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து நாளை சேலம், மதுரை, ஈரோடு,கிருஷ்ணகிரி, வேலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது. மேலும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வரும் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் மன்னார்வளைகுடா, தமிழக கடலோர பகுதிகளிலும், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளிலும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். அதுமட்டுமல்லாமல் இன்றும் நாளையும் கேரள கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 60 கிலோமீட்டர் வேகத்திலும் கூட சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் இந்த கடலோர பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleவிவாகரத்திற்கு பிறகு கோயில், கோயிலாக சுற்றும் சமந்தா காரணம் இதுதானா.!!
Next articleமீண்டும் உயிர்த்தெழுவோம் என நம்பி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தற்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!