தமிழ்நாட்டில் மிக கோலாகாலமாக கொண்டாடப்படும் விழாக்களில் தீபாவளி கொண்டாட்டம் மிக முக்கியமான ஒன்று.
புத்தாடை, பட்டாசு, சொந்த ஊருக்கு செல்வது, புதுப்படம், பலகாரம் என ஒரு வாரத்திற்கு முன்பே தீபாவளி களைகட்டி விடும்.
இம்முறை வார இறுதி நாளில் தீபாவளி வர இருப்பதால், பல பகுதிகளில் சுய காரணம் கருதி தங்கி இருப்பவர்கள் கூட தங்களது சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு இருக்கின்றனர்.
இதற்காக தமிழக அரசும் சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்குகின்றன.
தீபாவளி புத்தாடை வாங்க வார இறுதி நாளான நேற்று சென்னை தியாகராய நகர் மக்கள் வெள்ளத்தில் மிதந்தது என்றே சொல்லலாம்.
எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் தீபாவளி கொண்டாட்டத்தின் மீது மக்களிடையே அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
இதற்கு மிக முக்கிய காரணம் கொரோனா, கொரோனா பெருந்தொற்று அச்சம், ஊரடங்கு காரணமாக போன வருட தீபாவளி அத்தனை சிறப்பாக கொண்டாடப்படவில்லை.
இந்த வருடம் கொரோனா எண்ணிக்கை சரிந்துள்ளதாலும், கொரோனா தடுப்பூசி காரணமாகவும் இம்முறை தீபாவளி கொண்டாட்டம் விமரிசையாகவே ஆரம்பித்தது.
ஆனால் இந்த கொண்டாட்டத்தை தடுக்கும் விதமாக கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கி கொண்டிருக்கிறது. இரு தினங்களாக தொடர் மழை பெய்து வருவதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி விட்டனர்.
இந்நிலையில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி விட்டது.
இதனால் தொடர்ந்து நான்கு நாட்கள் மழை இருக்கும் அதாவது தீபாவளி வரை மழை இருக்கும் என வானிலை
ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் இந்த மழை தீபாவளி அன்றும் மக்களை வீட்டோடு முடக்கி விடவும் வாய்ப்பு உள்ளது.