மூன்று நாட்கள் வி.ஐ.பி தரிசனம் ரத்து! பக்தர்கள் அனுசரிக்க வேண்டும்!
கடந்த ஒன்றரை வருடங்களாகவே கொரோனா தொற்றின் காரணமாக பொதுமக்கள் கூடும் இடங்களான பள்ளிகள், கல்லூரிகள், கோவில்கள், மத வழிபாட்டுத் தளங்கள் மற்றும் மால்கள் என அனைத்தும் மூடி இருந்தது.
தற்போது சிறிது, சிறிதாக தொற்று குறைந்துள்ளதால் அனைத்தும் சாதாரண நிலைக்கு திரும்பி வர ஆரம்பித்து உள்ளது.பள்ளி கல்லூரிகள் செயல்பட ஆரம்பித்தது. அதை தொடர்ந்து சில கட்டுப்பாடுகளுடன் கோவில்கள் திறக்கப்பட்டது.
அதே போல் திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனா கட்டுப்பாடு காரணமாக அங்கு இலவச தரிசனங்கள் உட்பட பல தரிசனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தற்போது குறைவான தொற்றின் எதிரொலியாக பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
முதலில் வி.ஐ.பி தரிசனம் மட்டும் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதன் பிறகு உள்ளூர் மக்கள் மட்டும் அனுமதித்த நிலையில், தற்போது வெளிமாநில பக்தர்களும் இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த மாதம் அங்கு தென்மண்டல கவுன்சில் கூட்டம் வருகிற 14-ஆம் தேதி நடக்கிறது.
அதில் அனைத்து தென் மாநில முதல்-மந்திரிகள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய உள்துறை மந்திரிகள் ஆகியோர் பங்கேற்கிறார்கள். அதன் காரணமாக இந்த மாதம் 13, 14 மற்றும் 15ம் தேதிகளில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் இதற்கு பக்தர்கள் அனைவரும் பொறுமை காத்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் தேவஸ்தானத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.