சேலத்தில் ஏரி உடைப்பின் காரணமாக 10 வீடுகள் இடிந்து விழுந்தது! அரசு எதையும் சரிவர செய்யவில்லை! மக்கள் பரிதவிப்பு!
கடந்த இரண்டு நாட்களாகவே அனைத்து மாவட்டங்களும், மழையின் காரணமாக பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றது குறிப்பிடத் தக்கது. அதே போல் சேலத்தில் விடிய விடிய கனமழை பொழிந்தது. அதன் காரணமாக வீடுகளுக்குள் வெல்ல நீர் புகுந்து மக்கள் இருக்க இடம் இன்றி தவிக்கின்றனர். சேலத்தில் டி பெருமாள்பாளையத்தில் உள்ள காரைக்காடு ஏரியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றிரவு தொடர் கனமழை பொழிந்துள்ளது.
அதன் காரணமாக மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதில் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அதன் காரணமாக மக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். விடிய விடிய மழை பொழிந்ததும் இதற்கு ஒரு காரணம் என்றும் கூறினார். இதன் எதிரொலியாக 10 வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்து விட்டது. ஆனால் நல்லவேளையாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
மழைநீர் இடுப்பளவு வரை தேங்கி நிற்பதன் காரணமாக யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை என்று மக்கள் மிகவும் வருத்தம் தெரிவித்தனர். மேலும் உணவு, உடை, அரிசி எதுவும் இல்லாமல் மிகவும் சிரமப்படுவதாகவும் வேதனை தெரிவித்தனர். வீட்டில் சேகரித்து வைத்த அரிசி, பருப்பு முதலியவற்றை கூட தண்ணீர் அடித்துச் சென்று விட்டதாகவும் கண்ணீர் மல்க கூறினார்கள்.
மேலும் சுமார் 11 மணி அளவிலேயே வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விட்டது என்றும் தெரிவித்துள்ளனர். இடுப்பளவு தண்ணீர் இருந்ததன் காரணமாக குழந்தைகளையும், தங்களையும் காத்துக் கொள்வதே பெரிய விஷயமாக இருந்தது என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் கூறும்போது அரசு எதுவுமே செய்யவில்லை. ஏரியில் உடைப்பு ஏற்பட்டு இருக்கும் போதே அதை பார்த்து சரி செய்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என்றும் காட்டம் தெரிவித்தனர்.
மேலும் இதுவே தொடர்கதையாக உள்ளது என்றும், ஒவ்வொரு முறையும் இந்த மாதிரி பெருமழை பெய்யும் போதும் நாங்கள் இப்படி அல்லல் படுகிறோம் என்றும் பலர் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் அதிகாரிகளின் மெத்தனப் போக்கினால் தான் இவ்வளவு சிரமங்களையும் நாங்கள் சந்திக்கிறோம் என்றும், எங்கள் வீடுகள் அனைத்தும் இழந்து விட்டோம் என்றும் வேதனையுடன் கூறியுள்ளனர். மேலும் இவ்வளவு பெரிய சேதம் நடைபெற காரணமே அதிகாரிகள்தான் என்றும் வேதனை தெரிவித்தனர். அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா என காத்திருந்து பார்க்கலாம்.