மழை வெள்ள பாதிப்பு, அதனால் ஏற்பட்டிருக்கக் கூடிய பாதிப்புகள் மற்றும் நிவாரணம் தொடர்பாக ஆலோசனை செய்வதற்காக நாளை மறுதினம் முதல் அமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூட இருக்கின்றது.
தமிழ்நாட்டில் பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெய்து மிகப்பெரிய சேதங்களை உண்டாக்கி இருக்கிறது. இடங்களில் வீடுகள், குடிசைகள் உள்ளிட்டவை சேதமடைந்து இருக்கின்றன. டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல மாவட்டங்களில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது, மழை வெள்ளத்தில் பயிர்கள் மூழ்கிவிட்டன.
இந்த சூழ்நிலையில். நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்படுவதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது. எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நகராட்சி தேர்தல் நடத்தப்பட இருக்கின்றன. அதற்கான ஆலோசனை இந்த அமைச்சரவை கூட்டத்தில் முன்னெடுக்கப்படும் என சொல்லப்படுகிறது.
அதோடு தமிழ்நாட்டில் பெய்து வரும் மழையின் காரணமாக, ஏற்பட்டிருக்கக் கூடிய சேதங்கள், சேத பாதிப்பு மற்றும் அதற்காக மத்திய அரசிடம் கேட்க வேண்டிய நிதி உள்ளிட்டவை தொடர்பாக அமைச்சரவையில் முடிவு எடுக்கப்படும் என்று சொல்லப்படுகின்றது.