நாட்டில் மாதிரி சமுதாய சமையல் கூடம் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடந்தது மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை நுகர்வோர் பாதுகாப்பு உணவு மற்றும் பொது விநியோகத் துறை மற்றும் கைத்தறித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பங்கேற்றார்.
தமிழக அரசு எல்லா தரப்பு மக்களுக்கும் வருமானம் மற்றும் சமூக பாகுபாடில்லாமல் உணவு பாதுகாப்பினை உறுதி செய்ய கடந்த 40 வருடகாலமாக எல்லோருக்குமான பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
திமுக அரசு பதவியேற்றவுடன் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 2 கோடியே 9 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை ரூபாய் 978 கோடி செலவிலும், தலா 4 ஆயிரம் பணத்தையும் நோய்த்தொற்று பேரிடர் நிவாரணமாக வழங்கியது. எதிர்வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு 21 உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பை 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1161 கோடி செலவில் வழங்கப்பட இருக்கிறது தமிழக அரசு. 650 சமூக உணவகங்களை அம்மா உணவகம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் மூலமாக நடத்தி வருகின்றனர். தரமான உணவை மானிய விலையில் ஏழை எளிய மக்களுக்கும், தேவைப்படுவோருக்கும், இதன் மூலமாக வழங்கிவருகிறது.
இந்த எண்ணிக்கை மாவட்ட தலைநகரங்களில் இருக்கின்ற அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு தலைமை மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உதவும் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் வெளி நோயாளிகளின் நலன் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு நடத்தப்படும் உணவகங்களையும் உள்ளடக்கியதாகும் என தெரிவித்திருக்கிறார். இந்த உணவகங்களில் இரண்டு இட்லி 1 ரூபாய்க்கும் மற்றும் எலுமிச்சை சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும், பகலிலும் 2 சப்பாத்தி பருப்புடன் 3 ரூபாய்க்கு மாலையிலும் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல பல வகையான சாதங்கள் சாம்பார் கருவேப்பிலை சாதகங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல் நடப்பு மாதம் 11 ஆம் தேதி வரையில் 15 கோடிக்கும் அதிகமானோர் இந்த உணவகங்கள் மூலமாக பயனடைந்திருக்கிறார்கள். 30 ஆயிரத்து 490 கட்டுமான தொழிலாளர்கள், வெளி மாநிலங்களில் இருந்து வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களையும் ஒன்றாக இணைத்து இதே காலகட்டத்தில் பயன் பெற்று இருக்கிறார்கள் என கூறியிருக்கிறார்.
நோய் தொற்று காலத்திலும், மற்ற பேரிடர் காலங்களில் இந்த உணவகங்களில் கட்டணம் இன்றி உணவுகள் வழங்கப்படுகின்றன. எதிர்வரும் காலத்தில் இதேபோன்று கூடுதலாக 500 சமுதாய உணவகங்கள் கலைஞர் உணவகம் என்ற பெயரில் அமைக்கப்பட இருக்கின்றன என்று தெரிவித்திருக்கிறார்.
இந்தத் திட்டத்திற்காக செப்டம்பர் மாதம் வரையில் 2021 -22 ம் நிதியாண்டில் 3227 டன் அரிசியும், 362 டன் கோதுமையும், பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
கடந்த செப்டம்பர் மாதம் 21ம் தேதி மத்திய அமைச்சரை நேரில் சந்தித்த சமயத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று வைத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டதற்காக தமிழக விவசாயிகளின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கின்றார்.
தமிழ்நாட்டில் அரைக்கப்படும் பச்சரிசியில் 1 லட்சம் டன்னை அருகில் இருக்கின்ற மாநிலங்களுக்கு இந்திய உணவுக் கழகத்தின் மூலமாக ஒப்படைப்பு செய்து அதற்கு ஈடாக 1 லட்சம் டன் புழுங்கல் அரிசி வழங்க வேண்டும் என்று அன்று நான் வைத்த மற்றொரு கோரிக்கையையும் விரைந்து நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்திருக்கிறார்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொலைநோக்கு தலைமை மற்றும் வழிகாட்டுதலின்படி மத்திய அரசுடனும், மற்ற மாநில அரசுகளும் ஒன்றாக இணைந்து செயல்பட்டு இந்தியாவை பட்டினி மற்றும் சத்துக்குறைவு இல்லாத நாடாக மாற்றுவதற்கு தமிழகம் எப்போதும் துணையாக இருக்கும் என்று அவர் கூறியிருக்கிறார்.