முப்படைகளின் முதல் தலைமை தளபதி பிபின் ராவத் மரணம்! என்ன செய்யப்போகிறது மத்திய அரசு?

0
227

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசால் புதிதாக ஏற்படுத்தப்பட்ட முப்படைகளின் தலைமைத் தளபதி என்ற பதவியில் சென்ற வருடம் ஜனவரி மாதம் முதல் பணியாற்றி வந்த பிபின் ராவத் அதற்கு முன்னதாக ராணுவ தளபதியாக இருந்து வந்தார். அவர் முப்படைகளின் தலைமைத் தளபதி என்ற பதவிக்கு நியமனம் செய்யப்பட்ட உடன் இந்திய ராணுவ தளபதியாக நரவனே நியமனம் செய்யப்பட்டார்.

இவர் நேற்று நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் இருக்கின்ற ராணுவ பயிற்சி கல்லூரியில் நடைபெற இருந்த ஒரு ராணுவ பயிற்சி அதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கு பெறுவதற்காக தன்னுடைய மனைவி மதுலிகாவுடன் தமிழகம் வந்து சேர்ந்தார். ராணுவ விமானம் மூலமாக கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திற்கு காலை 10 .30 மணி அளவில் வந்த பிபின் ராவத் சிறிது நேரம் அங்கேயே ஓய்வு எடுத்ததாக சொல்லப்படுகிறது.

அதன்பிறகு விமானப்படைக்கு சொந்தமான எம் ஐ 17 ரக ஹெலிகாப்டர் மூலமாக பகல் 11 30 மணியளவில் புறப்பட்டு சென்றார், இந்த ஹெலிகாப்டரில் பிபின் ராவத், அவருடைய மனைவி மதுலிகா ராவத் மற்றும் 4 விமானிகள் என்று ஒட்டுமொத்தமாக 14 பேர் பயணித்தனர். ஹெலிகாப்டரை விங் கமாண்டர் ப்ரீத்வி சிங் சவுகான் இயக்கினார் என்று சொல்லப்படுகிறது.

இந்த ஹெலிகாப்டர் குன்னூர் பேருந்து நிலையத்தில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்ற காட்டேரி பூங்கா நஞ்சப்ப சத்திரம் பகுதியில் பகல் 12 மணியளவில் சென்றபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்ததாக சொல்லப்படுகிறது இதன் காரணமாக தரையை நோக்கி வந்த ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் இருக்கின்ற பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது. மிகவும் அடர்ந்த வனப்பகுதியில் ஹெலிகாப்டர் இன் காற்றாடி மரத்தில் மோதி கீழே விழுந்ததாக சொல்லப்படுகிறது.

அவ்வாறு கீழே விழுந்தவுடன் ஹெலிகாப்டர் நொறுங்கி தீப்பிடித்தது கண்ணிமைக்கும் நேரத்தில் மளமளவென்று பரவி ஏத்தி ஹெலிகாப்டர் முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது. இதற்கு காரணம் அந்த ஹெலிகாப்டரில் இருந்த அதிக அளவிலான எரிபொருள் தான் என்றும் சொல்லப்படுகிறது. ஏனென்றால் குன்னூர் பகுதியில் எங்கும் அருகாமையில் எரிபொருள் நிரப்புவதற்கான வசதி இல்லை என்றும் சொல்லப்படுகிறது. அதேநேரம் ராணுவ பயிற்சி மையத்தில் இருக்கின்ற ஹெலிபேட் சிறிய அளவிலான ஹெலிப்பேட் தான் என்று சொல்லப்படுகிறது. இதில் ஹெலிகாப்டரில் இருந்த எல்லோரும் தீயில் கருகி உயிரிழந்திருக்கிறார்கள். ஹெலிகாப்டர் விழுந்தபோது சம்பவ இடத்தில் வெடிகுண்டு வெடித்தது போல பயங்கரமான சப்தம் கேட்டு இருக்கிறது இதன் காரணமாக, அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருக்கிறார்கள்.

அப்போது ஹெலிகாப்டரில் இருந்த ராணுவ அதிகாரிகள் ஒரு சிலரின் உடல்கள் நாலாபுறமும் சிதறி கிடந்ததாக சொல்லப்படுகிறது. அதோடு ஒரு சிலர் உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்ததாகவும், தெரிவிக்கப்படுகின்றது. உடனடியாக அவர்களை மீட்பதற்கு பொதுமக்கள் முயற்சி செய்திருக்கிறார்கள், ஆனால் எரிபொருள் டேங்க் முழுவதும் நிரப்பப்பட்டு இருந்ததன் காரணமாக, அதில் பிடித்த தீ பல அடி தூரத்திற்கு இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக கிராம மக்களால் ஹெலிகாப்டருக்கு அருகில் செல்ல இயலவில்லை. ஆனாலும் அவர்கள் தண்ணீர் உள்ளிட்ட பொருட்களால் தீயை அணைக்க முயற்சி செய்து இருக்கிறார்கள்.

இதற்கிடையே ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான தகவல் அறிந்தவுடன் வெலிங்டன் ராணுவ மையத்தில் இருந்து மீட்பு குழுவினரும், தீயணைப்பு படையினரும், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்கள். அவர்கள் ஹெலிகாப்டரில் பிடித்த தீயை அணைத்து அதிலிருந்தவர்களை மீட்கும் பணிகளை ஆரம்பிக்க தொடங்கினார்கள். அவர்களுடன் மருத்துவ குழுவினர், ராணுவ உயர் அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளை முடுக்கி விட்டார்கள்.

அதோடு வெலிங்டன் ராணுவ அதிகாரிகள், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் விரைந்து சென்று மீட்பு பணிகளை விரைவு படுத்தினார்கள். ஆனாலும் விபத்திற்குள்ளான ஹெலிகாப்டர் தொடர்ந்து எரிந்து கொண்டே இருந்ததால் அதில் சிக்கி உயிரிழந்தவர்கள் மற்றும் உயிருக்கு போராடியவர்களை மீட்கும் பணி தாமதம் ஆனது என்று சொல்லப்படுகிறது.

மிக நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சுமார் 2 மணி நேரத்திற்குப் பின்பு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது, இதனையடுத்து விபத்தில் உயிரிழந்தவர்களின் கருகிய உடல்கள் மற்றும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அவர்கள் எல்லோரும் வெலிங்டனில் இருக்கின்ற ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவர்களில் பலரும் பலியானார்கள் இந்த சம்பவத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் படுகாயம் அடைந்திருந்தார். வெலிங்டன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். இந்த தகவலை மாலையில் விமானப்படை அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதோடு இந்த விபத்தில் அவருடைய மனைவி மதுலிகா ராவத்தும் பலியானார் என்று சொல்லப்படுகிறது.

ஆகவே இவர்கள் இருவரையும் சேர்த்து இந்த ஹெலிகாப்டர் விபத்தில் 13 பேர் பலியானதாக விமானப்படை அறிவித்தது அப்படி பலியானவர்களின் விவரம் வருமாறு,பிபின் ராவத்,மதுலிகா ராவத், பிரிகேடியர் லிட்டர் கர்ணல் ஹர்ஜிந்தர்சிங், குர்சேவக்சிங், ஜிதேந்திர குமார் விவேக் குமார், சாய்தேஜா ஷார்ட் இவர்களைத்தவிர உயிரிழந்த மேலும் 4 பேர் பற்றிய விவரங்கள் தெரியவில்லை. மீட்புப்பணிகள் மாலை 3 மணி அளவில் நிறைவுபெற்றது. ஒருவர் மட்டும் உயிர் தப்பினார் அவருடைய பெயர் குரூப் கேப்டன் வருண் சிங் என்று சொல்லப்படுகிறது. அவர் படுகாயங்களுடன் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் அவரும் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரை பறித்த இந்த விபத்துக்கான காரணம் இதுவரையில் தெரிய வரவில்லை, ஆனாலும் இந்த ஹெலிகாப்டர் வெலிங்டன் ராணுவ மையத்தில் இருந்து ஒரு சில கிலோ மீட்டருக்கு முன்புதான் விழுந்து நொறுங்கி இருக்கிறது. அதாவது தரையிறங்குவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்புதான் இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது, அந்த சமயத்தில் அங்கே பனி மூட்டமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆகவே தரையிறங்குவதற்கு தாழ்வாக பறந்த போது மோசமான வானிலை காரணமாக, மரத்தில் மோதி கீழே விழுந்து தீப்பிடித்து இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

இது தொடர்பான தகவல் அறிந்தவுடன் அது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது ஆகவே பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள். இந்த விசாரணையின் முடிவில் விபத்துக்கு உள்ளான காரணம் தெரியவரும் என்று அதிகாரிகள் கூறி இருக்கிறார்கள். இதற்கிடையில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய தகவல் அறிந்தவுடன் மத்திய அரசு வட்டாரங்கள் கடுமையான அதிர்ச்சிக்கு ஆளாயின, டெல்லி வட்டாரங்கள் மிகப்பெரிய பரபரப்பாக காணப்படுகிறது.

விபத்து தொடர்பான தகவல் அறிந்தவுடன் கோயம்புத்தூர் மற்றும் வெலிங்டனில் இருக்கின்ற ராணுவம் மற்றும் விமான படை உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரையாற்றிய இருக்கக்கூடிய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விபத்து தொடர்பான தகவலை கேட்டறிந்தார். அதன் பிறகு அவர் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து விபத்து தொடர்பாக விளக்கம் அளித்திருக்கிறார். இதனை அடுத்து டெல்லியில் இருக்கின்ற பிபின் ராவத் இல்லத்திற்கு சென்ற ராஜ்நாத் சிங் அங்கு அவருடைய மகளுக்கு ஆறுதல் தெரிவித்தார், இந்திய முப்படைகளின் முதல் தலைமை தளபதி என்ற பதவியில் இருந்த பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்திருப்பது ஒட்டுமொத்த நாட்டையும் ,உலுக்கி இருக்கிறது. அத்துடன் மத்திய அரசுக்கும முப்படையினருக்கும், மிகப் பெரிய அதிர்ச்சியையும், சோகத்தையும், கொடுத்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

Previous articleவிபத்தில் மரணமடைந்த முப்படைகளின் தலைமைத் தளபதியின் உடலுக்கு இன்று அஞ்சலி செலுத்தும் முதலமைச்சர் ஸ்டாலின்!
Next articleஅதிமுக சார்பாக அறிவிக்கப்பட்ட போராட்டம் திடீர் ஒத்திவைப்பு! காரணம் என்ன?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here