விபத்தில் மரணமடைந்த முப்படைகளின் தலைமைத் தளபதியின் உடலுக்கு இன்று அஞ்சலி செலுத்தும் முதலமைச்சர் ஸ்டாலின்!

0
190

ராணுவ விமான விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் பலியானதை தொடர்ந்து நீலகிரி மாவட்டம் குன்னூர் நோக்கி விரைந்த முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று இரவு ராணுவ அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படுகிறது. முப்படைகளின் தலைமைத் தளபதியின் உடலுக்கு இன்று முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்த இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி உட்பட 13 பேர் பலியானார்கள். இதில் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் கடுமையான காயங்களுடன் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

இந்த நிலையில், மீட்பு பணிகள் தொடர்பாக நேரில் சென்று பார்வையிடுவதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று மாலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக 6 .30 மணி அளவில் கோவை விமான நிலையம் சென்றடைந்தார். அவருடன் அமைச்சர்கள் கே. என். நேரு, சாமிநாதன் மற்றும் தலைமைச் செயலாளர் இறையன்பு முதலமைச்சரின் தனி செயலாளர் உதயச்சந்திரன் உள்ளிட்டோர் சென்று இருந்ததாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் கார் மூலமாக சாலை வழியாக குன்னூர் புறப்பட்டு சென்றார், வழிநெடுகிலும் பலத்த காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரவு 9 மணி அளவில் குன்னூரில் இருக்கின்ற ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் சென்றடைந்தார்.

அதன் பிறகு அங்கே இருக்கக்கூடிய எம்ஆர்சி மையத்தில் ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் எஸ்பி அம்ரித் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. அதன்பிறகு அவர் கார் மூலமாக குன்னூரில் இருக்கின்ற தனியார் விடுதிக்கு சென்றடைந்தார், அங்கேயே இரவு ஓய்வு எடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து இன்று காலையில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவருடைய மனைவி மற்றும் சக ராணுவ வீரர்களின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.