தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக, பல மாவட்டங்களில் கனமழை பெய்தது குறிப்பாக சென்னையில் பெரும் மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக, மாநகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளித்தன. பாதிப்புகளை மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான 7 பேர் கொண்ட குழு ஆய்வு செய்தது. அதோடு தமிழக அரசு சார்பாக மத்திய அரசிடம் வெள்ள நிவாரணம் வழங்க கோரிக்கையும் விடுக்கப்பட்டது.
வடகிழக்கு பருவமழையின் பாதிப்புகளை சரி செய்வதற்காக 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் 20ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 15ஆம் தேதி காலையில் பெய்த தொடர் மழையின் காரணமாக, 32 மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆகவே மழை பாதிப்புகளை சரி செய்வதற்காக 14 துறைகளுக்கு 300 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு ஆணை வெளியிட்டு இருக்கிறது.
அதனடிப்படையில் மாநகராட்சிக்கு 132 கோடியும், நகராட்சி நிர்வாகத்திற்கு 62 கோடியும், நீர் வளத் துறைக்கு 20 கோடி ரூபாயும், நெடுஞ்சாலைத் துறைக்கு 17 கோடி ரூபாயும், மின்சாரத் துறைக்கு 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.