தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவருடைய மகன் பென்னிக்ஸ் உள்ளிட்டோரை சென்ற வருடம் ஊரடங்கு உத்தரவின் போது அனுமதி வழங்கப்பட்ட நேரத்தை தாண்டி கடையை திறந்து வைத்ததாக தெரிவித்து காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தாக்கியதில் உயிரிழந்தார்கள்.
அந்த சமயத்தில் இந்த வழக்கு தமிழகம் முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இந்த நிகழ்வுக்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்தார்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது இந்த சூழ்நிலையில், தந்தை, மகன் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த நேரத்தில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆஜராகி சாட்சியம் கொடுத்திருக்கிறார். விசாரணையின் முடிவில் இந்த வழக்கை வருகின்ற 21ம் தேதிக்கு நீதிபதி பத்மநாபன் ஒத்திவைத்து இருக்கிறார்.
அதன்பிறகு இது தொடர்பாக உயிரிழந்த ஜெயராஜ் மனைவி செல்வராணியின் வழக்கறிஞர் தெரிவிக்கும்போது ஜெயராஜ் ,பென்னிக்ஸ், உள்ளிட்டோரை சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் அடித்திருக்கிறார்கள் இதில் அவர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர். உடல் முழுவதும் ரத்தக் கசிவு ஆங்காங்கே தென்பட்டது என கூறியிருக்கிறார்.
இதன் காரணமாக, காவல்துறையினர் அவர்கள் மீது எந்த விதமான புகாரும் வந்துவிடக் கூடாது எனவும், இவர்களை தாக்கியதால் எந்த பிரச்சினையும் வந்து விடக்கூடாது என்று நினைத்தார்கள். தங்களுடைய தவறை மறைக்க ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ், உள்ளிட்டோரை பொய் புகார் கூறி அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து இருந்தார்கள். அந்த வழக்கில் அவர்களை கைது செய்து கோவில்பட்டி சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர்.
அவர்கள் உயிரிழந்த பிறகு அவர்கள் தொடர்பான வழக்கு ஆவணங்களை அவசர,அவசரமாக நிறுத்தினார்கள் என்று சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் சாட்சியம் கொடுத்திருக்கிறார்.
இதுவரையில் மகளிர் காவலர் ரேவதியின் வாக்குமூலம் மட்டுமே இந்த வழக்கில் முக்கியமானதாக இருந்த சூழ்நிலையில், சிறப்பு உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் இந்த பரபரப்பு தகவலை நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார் ஆகவே இது இரண்டாவது முக்கிய சாட்சியாக மாறி உள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட காவல்துறையினர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் அவரிடம் குறுக்கு விசாரணை செய்திருக்கிறார்கள். மேலும் சிலருடைய சார்பில் விசாரிக்க வேண்டும். இதற்காக இந்த வழக்கு வருகிற 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது, அன்றைய தினமும் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் வழங்க இருக்கிறார் என்று அந்த வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.