மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கண்ணசைவிற்கு கூட காரணம் என்ன என்பதை சரியாக அறிந்து வைத்திருந்தவர் அவருடைய நேர்முக உதவியாளர் சண்முகநாதன்.. அவருக்கு எபபோது என்ன தேவை? அவருடைய பார்வைக்கு என்ன அர்த்தம்? என்பது உள்ளிட்ட அனைத்தும் சண்முகநாதனுக்கு அத்துப்படி.
இன்னும் சொல்லப்போனால் கருணாநிதியும், சண்முகநாதனும், ஒருவரையொருவர் பிரிந்து இருந்ததே கிடையாது. நாள்முழுவதும் கருணாநிதி எங்கே இருக்கிறாரோ, அங்கே சண்முகநாதனை பார்க்கலாம்.
இன்னும் சொல்லப்போனால் இவரை சந்திக்காமல் கருணாநிதியை யாரும் சந்தித்து விட முடியாது என்ற அளவிற்கு இருவரும் மிக நெருக்கமாக இருந்தவர்கள் சுமார் 50 ஆண்டுகாலம் கருணாநிதியின் நிழலாகவே இருந்தவர் சண்முகநாதன்.
அவர் ஒரு சில வாரங்களுக்கு முன்னர் சென்னை காவேரி மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக, அனுமதிக்கப்பட்டார். இந்த சூழ்நிலையில், ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின் அவரை மருத்துவமனையில் சென்று நேரில் சந்தித்து உடல் நலம் தொடர்பாக விசாரித்து வந்தார்.
இந்த சூழ்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சண்முகநாதன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் சண்முகநாதன் வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவருடைய உடலுக்கு நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்திவிட்டு வந்தார். அதோடு மட்டுமல்லாமல் பல முக்கிய அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் சண்முகநாதன் மீது கொண்ட அதீத அன்பின் காரணமாக, இரண்டாவது முறையாக நேற்று இரவு மறுபடியும் அவருடைய உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். நேற்று மாலை அஞ்சலி செலுத்திய சூழ்நிலையில், இரவில் மறுபடியும் அஞ்சலி செலுத்தியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இந்த சூழ்நிலையில், சண்முகநாதன் மறைந்ததை தொடர்ந்து அவருடைய இறுதி ஊர்வலத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கிறார் என்று சொல்லப்படுகிறது. இன்று பகல் 12 மணியளவில் சண்முகநாதனுக்கு மயிலாப்பூர் இடுகாட்டில் இறுதிச் சடங்கு நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.