ராஜேந்திர பாலாஜியை பிடிக்க கடலோர கண்காணிப்பு தீவிரம்!
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணத்தை பெற்றுக் கொண்டு ரூபாய் 3 கோடி வரை ஏமாற்றியதாக ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட அவரது கூட்டாளிகள் 3 பேர் மீது விருதுநகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார்.
இதனால் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க காவல்துறையினர் ஒன்பது தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர். இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி தப்பி சென்று பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக தகவல் அறிந்த காவல்துறையினர் பெங்களூருவில் முகாமிட்டு அவரை தேடி வருகின்றனர். மேலும் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து அவர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் ‘லுக் அவுட்’ நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில் அவர் கடல் வழியாக தப்பி செல்ல வாய்ப்பு இருப்பதால் கடல் வழியாக தப்பி செல்லாமல் இருக்க கிழக்கு கடற்கரை பகுதிகளான தூத்துக்குடி கடற்கரையில் இருந்து வேதாரண்யம் கடற்கரை வரை உள்ள கடற்கரை பகுதிகளில் காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து ராஜேந்திர பாலாஜியை வலைவீசி தேடி வருகின்றனர்.