பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக எல்லா அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கும், பச்சரிசி, வெல்லம், கரும்பு, துணி பை, உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.
ஜனவரி மாதம் 1ஆம் தேதியிலிருந்து இந்த பொருட்கள் வழங்கப்படும் என்று ஏற்கனவே தகவல் வெளியாகி உள்ளது இந்த நிலையில், தமிழக அரசின் இந்த உத்தரவை செயல்படுத்துவதற்கான கடிதத்தை அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் தொடர்புடைய மற்ற அதிகாரிகளுக்கும் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் அனுப்பி இருக்கின்றார்.
அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது 21 பொருட்களைக் கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பு 2 கோடியே 15 லட்சத்து 29 ஆயிரத்து 114 ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு மற்றும் 18 ஆயிரத்து 946 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பத்தாருக்கும் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.
இவற்றை சரியான முறையில் வினியோகம் செய்ய வேண்டிய முழுமையான பொறுப்பும் மாவட்ட ஆட்சியாளர்களையே சாரும். பரிசுத் தொகுப்பு விநியோக பணி தொடங்கும் நாள் தொடர்பான அரசின் அறிவுரைக்கு வந்தவுடன் தனித்தனியாக தெரிவிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.
ஜனவரி மாதம் ஏழாம் தேதி ரேஷன் கடைகளுக்கு பணி நாளாக அறிவிக்கப்படுகிறது அதற்கு பதிலாக 15ஆம் தேதி அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்படும். ஒரே சமயத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் கடையில் குவிந்து விடுவதை தடுப்பதற்காகவும், நோய்தொற்று பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற ஏதுவாகவும், பெருவாரியாக சுழற்சிமுறையில் 150 முதல் 200 ரேஷன் கார்டுகள் வைத்திருப்பவர்கள் உள்ளிட்டவர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்க ஏற்பாடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
அதனை அவர்களுக்கு வழங்கும் நாள், நேரம், உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட்டு தொகையை முன்கூட்டியே வழங்க வேண்டும். ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதை உறுதி செய்யும் விதத்தில் அவர்களுடைய ஒப்புதலை பெற வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
யாரும் விடுபட்டு போய்விடக்கூடாது எந்த ஒரு சிரமமும் இன்றி நியாயவிலை கடைகளில் பொதுமக்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்படவேண்டும். ரேஷன் அட்டையில் பெயர் இடம் பெற்றிருக்கின்ற உறுப்பினர் யாரும் கடைக்கு வந்து பரிசுத்தொகை வாங்கிக் கொள்ளலாம். வரிசையில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், வரிசையில் ஆண்கள் தனியாகவும், பெண்கள் தனியாகவும், நிற்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.