சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு
கொரோனா பரவல் காரணமாக நாட்டில் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அரசு ஆணை பிறப்பித்தது. அதனை தொடர்ந்து நாட்டில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து இந்தியாவில் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஜனவரி 3ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2007ம் ஆண்டு அல்லது அதற்கு முந்தைய ஆண்டுகளில் பிறந்த அனைத்து சிறுவர்களும், ஜனவரி 3-ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியை மட்டுமே செலுத்த வேண்டும் எனவும், சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான முன்பதிவு வரும் 1ம் தேதி தொடங்கும் எனவும் வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது. முன்பதிவை, இணையதளம் மூலமாகவோ அல்லது தடுப்பூசி மையங்களுக்கு நேரடியாக சென்றோ செய்துகொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது. முன்பதிவுக்கு ஆதார் அட்டை அல்லது பள்ளி அடையாள அட்டையை பயன்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது.
இதுவரை, இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோர் ஜனவரி 10-ம் தேதி முதல் 3-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், முதல் இரண்டு தவணையில் செலுத்திய தடுப்பூசி வகையை தான் 3வது தவணையிலும் செலுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.