புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே அம்மாசத்திரம் என்ற கிராமம் இருக்கிறது இங்கே அரசு துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் இருக்கிறது. இந்த மையத்தில் மத்திய, மாநில, காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு பணியில் ஈடுபடுவார்கள் என்று சொல்லப்படுகிறது.
அதன் அடிப்படையில், கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதி துப்பாக்கி சுடும் பணியில் ஈடுபட்டு இருந்தனர் அப்போது இந்த பயிற்சி மையத்தையும் கடந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்ற நார்த்தமலை கிராமத்தில் தன்னுடைய வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுவன் புகழேந்தி தலையில் தோட்டா பாய்ந்தது. இதன் காரணமாக, படு காயமடைந்த சிறுவன் கீரனூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அதன்பிறகு அங்கிருந்து புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கே சிறுவனுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த சூழ்நிலையில், சிறுவனின் நிலைமை கவலைக்கிடமானது, இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அந்த சிறுவன் அங்கே சிகிச்சையில் வைக்கப்பட்டிருந்தார். அங்கே சிறுவனின் மூளைக்கு அருகே தோட்டா பாய்ந்து இருப்பதாக மருத்துவ குழுவினர் தெரிவித்தார்கள். அந்த தோட்டா அகற்றப்பட்டு தொடர்ந்து சிறுவனுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இதனை அடுத்து நான்கு தினங்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த சிறுவன் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பலியானார்.
சிறுவன் உயிரிழந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் குடும்பத்தைச் சார்ந்தவர்களும், உறவினர்களும், சிறுவனின் உயிர் இழப்புக்கு நீதி கேட்டு மருத்துவமனைக்கு வெளியே போராட்டத்தில் குதித்தார்கள்.
அந்த சமயத்தில் சிறுவனின் தாய் எப்படியும் கண்விழித்து விடுவான் என்று நம்பி இருந்தேன், மீண்டு வந்து அம்மா என்று அழைப்பான் என்று காத்திருந்தேன், ஆனால் கடைசி வரையில் கண்விழிக்காமலேயே போய் விட்டானே என்று கதறி அழுதது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இந்த சூழ்நிலையில், இந்த துயர சம்பவத்தை அறிந்து மிகவும் வேதனை அடைந்ததாக தெரிவித்து சிறுவனின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து இருக்கின்ற முதலமைச்சர் ஸ்டாலின் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டு இருக்கிறார்.
அதோடு இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் யார் என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது என்றும், விசாரணையின் முடிவில் சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இந்த சம்பவம் குறித்து முன்னரே புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி தலைமையில் விசாரணை நடந்து வருகிறது, அதே நேரம் சம்பந்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தளத்தை தற்காலிகமாக மூடவும் மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.