போக்கு காட்டிய ராஜேந்திரபாலாஜி மடக்கிப் பிடித்த தனிப்படை காவல்துறையினர்! அதிரடி நடவடிக்கை!

அதிமுகவை சார்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் 3 கோடியே 10 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. அதோடு அவருடைய உதவியாளர்கள் மீதும் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் முன்ஜாமீன் வேண்டும் என்று தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேந்திரபாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனைத் தொடர்ந்து தமிழக காவல்துறையினர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அவரை பிடிப்பதற்காக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் ராஜேந்திரபாலாஜி முன்ஜாமீன் வழங்க மறுத்து விட்ட படியால் அவர் திடீரென்று தலைமறைவானார். இதனை தொடர்ந்து தனிப்படை காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வந்தார்கள்.

இந்த நிலையில், நேற்று கர்நாடக மாநிலத்தில் வைத்து அவர் தனிப்படை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர் தமிழகம் அழைத்து வரப்பட்டார், அதன்பிறகு முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விருதுநகர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அதன் பின்னர் ராஜேந்திர பாலாஜி விசாரணைக்காக நேற்று இரவு விருதுநகர் மாவட்டத்திற்கு அழைத்து வரப்பட்டார், அங்கே மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார், அவரிடம் காவல்துறையினர் விடிய, விடிய, விசாரணை செய்ததாக சொல்லப்படுகிறது.

இதற்கு நடுவில் ராஜேந்திரபாலாஜி ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கின்ற குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி பரம்வீர் முன்பு இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று ராஜேந்திரபாலாஜி தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் காவல்துறையினர் தரப்பில் ராஜேந்திர பாலாஜி அவர்களை அனுமதியில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ராஜேந்திர பாலாஜிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்தார். இதனை தொடர்ந்து வரும் 20-ஆம் தேதி வரையில் அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்படுவார் என்று சொல்லப்படுகிறது. அதற்கான உத்தரவையும் நீதிபதி பிறப்பித்திருக்கிறார், இதனையடுத்து ராஜேந்திரபாலாஜி சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Comment