பொதுக்கூட்டம் மற்றும் வாகன பேரணி உள்ளிட்டவை நடத்த தடை! அமலுக்கு வந்த கட்டுப்பாடுகள்!!
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளதை தொடர்ந்து அந்த மாநிலங்களில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.
தேர்தலுக்கான ஏற்பாடுகள் நிறைவடைந்ததை அடுத்து தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 5 மாநில தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு அவர் பேசுகையில்
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தேர்தல் வெளிப்படையாக நடத்தப்படும் என்றும் கடந்த 6 மாத காலமாக தேர்தலை சிறப்பான முறையில் நடத்துவது குறித்து தீவிரமாக ஆலோசித்ததாகவும் அந்த வகையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் வாக்குச்சாவடிகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அந்த வகையில் ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி ஏற்படுத்தப்படும் என்றும் தேர்தல் நடத்துவதற்கு தேவையான வாக்குப்பதிவு எந்திரங்களும் மற்றும் விவிபேட் எந்திரங்களும் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது தேர்தல் நடைபெற இருக்கின்ற ஐந்து மாநிலங்களில் கோவா மற்றும் மணிப்பூர் மாநிலங்களை தவிர்த்து இதர மாநிலங்களான உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் வேட்பாளர்களின் செலவுத்தொகை வரம்பு ரூ.28 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து தேர்தலை காரணமாக கொண்டு மதுவோ மற்றும் பணமோ எதுவும் அன்பளிப்பாக வழங்க கூடாது எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு நடை பயணம், பொதுக்கூட்டம் மற்றும் இரு சக்கர வாகன பேரணி உள்ளிட்டவை நடத்த ஜனவரி 15ஆம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.