தமிழகத்தில் மீண்டும் பள்ளிகளை திறக்க முடிவு!
கொரோனா பெருந்தொற்றின் பரவல் காரணமாக தமிழகத்தில் மூடப்பட்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்ததை அடுத்து கடந்த ஆண்டு இறுதியில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் கொரோனா மற்றும் அதன் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் தொற்று நாட்டில் வேகமாக பரவத் தொடங்கியது.
இதையடுத்து கடந்த 10ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பள்ளி மாணவர்களின் நலன் கருதி தமிழகத்தில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இந்த மாதம் இறுதி வரை நேரடி வகுப்புகள் நடத்த தமிழக அரசு தடை விதித்தது. எனினும், ஆன்லைன் வாயிலாக இந்த வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தலாம் என அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில் பொதுத் தேர்வு எழுத உள்ள பத்தாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் அவர்களின் படிப்பின் நலனை கருதி நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இருப்பினும், தொற்று பரவல் அதிகரித்து வந்த காரணத்தால், பல்வேறு தரப்பில் இருந்து வந்த கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, மாணவர்களின் நலன் கருதி பத்து முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் இந்த மாதம் இறுதி வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகிற 31ஆம் தேதியுடன் முடிவுக்கு வருவதால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இந்த ஆலோசனையில், வருகிற பிப்ரவரி மாதம் 1ஆம் தேதியிலிருந்து 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி அளித்தால் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அதை தொடர்ந்து மே முதல் வாரத்தில் பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என கூறியுள்ளார்.