நகர்புற உள்ளாட்சித் தேர்தல் மூலம் முக்கிய திட்டம் தீட்டிய அன்புமணி ராமதாஸ்!

0
272

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் போட்டிப்போட்டுக்கொண்டு வேட்பாளர்களை இறுதி செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தேர்தல் பணிகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்பது குறித்தும் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு நேற்று இணைய வழியில் டாக்டர் ராமதாசும், அன்புமணி ராமதாசும் ஆலோசனைகளை வழங்கினர். இதில், பேசிய அன்புமணி ராமதாஸ், இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமானது என்றார். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட்டு சில வெற்றிகளைப் பெற்றுள்ளோம். பல இடங்களில் வெற்றி பெற்றும் மாற்றி அறிவித்துவிட்டனர். இது என்னைப் பொறுத்தவரை வெற்றியும் அல்ல, தோல்வியும் அல்ல.

இந்த முறை நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தனித்து அனைத்து இடங்களிலும் போட்டியிடுகிறோம். நிர்வாகிகள் வேட்பாளர்களை தேர்வு செய்து, ஒரு வார்டு விடாமல் அனைத்திலும் போட்டியிட வைக்க வேண்டும். வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும். மாம்பழம் சின்னத்தை மக்கள் மத்தியில் திரும்பத் திரும்ப பதிய வைக்க வேண்டும்.

மாம்பழம் சின்னம் அனைவரது மனதிலும் பதிய வேண்டும். வட மாநிலம் இல்லாமல், தென் மாநிலத்திலும் பாமக உள்ளது என்பதை நிரூபிக்க வேண்டும். இது அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அடித்தளமாக அமையும். தமிழகத்தில் மற்ற கட்சிகள், ஆட்சி அமைக்க வேண்டும் என்று அரசியல் செய்யாமல், ஒரு சில எம்எல்ஏ, எம்பி, கவுன்சிலர் சீட்டுகளுக்காகவே இருக்கிறார்கள். நாம் மட்டும் தான் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறோம்.

அதனால், அனைத்து வார்டுகளிலும் பாமகவினர் போட்டியிட்டு, நிர்வாகிகள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி அடுத்தத் தேர்தலுக்கு அடித்தளமாக இந்தத் தேர்தலை மாற்ற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Previous articleகேட்டதை கொடுப்பதாக உறுதி அளித்த திமுக! கே எஸ் அழகிரி மகிழ்ச்சி!
Next articleமியான்மர் போன்று உலகம் முழுவதும் உள்நாட்டுப் போர் வெடிக்கும் ஆபத்து! சீனா எச்சரிக்கை!