’சிங்கிள்’ பசங்களின் கவனத்திற்கு!!
வாட் சப்பிலும், பேஸ் புக்கிலும் சிங்கிள், முரட்டு சிங்கிள், 90’s கிட்ஸ்க்கு திருமணம் ஆகவில்லை என்ற மீம்ஸ்களையும், காமெடிகளையும் எல்லோரும் கடந்திருப்போம். இது ஏதோ ஒரு செய்தி என்று கடந்து போய் விட முடியாது. உண்மையிலேயே பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம், குறைந்து கொண்டு தான் வருகிறது.
குறிப்பாக மேற்கு மாவட்டங்களில் இதன் தாக்கம் அதிகமாகவே தெரிகிறது. ஒரு மாவட்டத்தில் 1000 ஆண் குழந்தைகள் பிறந்தால் 937 பெண் குழந்தைகள் தான் பிறக்கின்றன. அரியலூர், சென்னை, திண்டுக்கல், ராமநாதபுரம், சேலம் போன்ற ஊர்களில் இன்றும் பெண் சிசு கொலை நடந்து கொண்டு தான் இருக்கிறது. 1992 ல் இதற்கான சட்டம் இயற்றியும், கடுமையான தண்டனைகள் விதிக்கப் படாததால், இன்றளவும் சட்டத்திற்கு புறம்பாக கருக்கலைப்பு நடந்து கொண்டு தான் இருக்கிறது.
பெண் பிள்ளைகள் என்றால் ஏன் இவ்வளவு தயக்கம். படிப்பு திருமணம், பாதுகாப்பு போன்ற காரணங்களால் பெண் குழந்தைகள் பிறப்பை சிலர் ஏற்க மறுக்கின்றனர். இதற்கு உதாரணம், சமீப காலங்களில் பெண் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகள் தான்.
இதற்கான முழுப் பொறுப்பும் இந்த சமூகத்தையே சாரும். வேலியே பயிறை மேய்வது போல, பெண்களுக்கு பாதுகாப்பு தர வேண்டிய இந்த சமூகம், ஆண்களின் தவறுகளுக்கு துணைபோகிறது. இதன் விளைவு, பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது என்று, கருவிலேயே கருவறுக்கப் படுகின்றனர் குழந்தைகள்.
அடுத்து வரதட்சணைப் பிரச்சினை. இது இன்னும் ஓயவில்லை என்பது நிதர்சனமான உண்மை. இந்த பிரச்சினை படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று பாரபட்சம் பார்க்காமல், வியாதியாய் பரவியுள்ளது. இந்த மாதிரியான, சமூக அவலங்களும், கேடுகளும் பெண் குழந்தைகள் பிறப்பை கேள்விக்குறியாக்குகிறது. இதன் விளைவுகள் இப்போதே தெரிய ஆரம்பித்துவிட்டது. அரசு இதில் தீவிர கவனம் செலுத்தாவிட்டால், இனி வரும் ஆண்டுகளில் பேச்சுலர்ஸ்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கும்.