என்ன புதிய தொற்றா? உலக சுகாதார அமைப்பு என்ன சொல்கிறது?
சீனாவில் உள்ள உகான் நகரில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அதன்பிறகு உலக நாடுகள் முழுவதும் பரவியது. கொரோனா வைரஸ் தனது தீவிர பரவலால் பெரும்பாலான உலக நாடுகளை நிலைகுலையச் செய்தது. சுமார் இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகள் பலவற்றில் இந்த கொரோனா வைரஸ் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
மேலும், இந்த கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றங்கள் பெற்று தனது பரவும் வீரியத்தை அவ்வப்போது மாற்றியமைத்து கொண்டே வருகிறது. எனவே, இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. உலக சுகாதார அமைப்பும் தொற்றின் பரவல் குறித்து அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து வருகிறது.
இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பு கேள்வி-பதில் என்னும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இந்த கேள்வி-பதில் நிகழ்ச்சியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அந்த அமைப்பின் கொரோனா தொழில்நுட்பகுழுவின் தலைவர் பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
கொரோனா வைரஸ் மாறும்போது உருமாற்றம் ஏற்படுகிறது என கூறிய அவர் அது மேலும் உருமாறுவதற்கு வாய்ப்பு உண்டு என எச்சரித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் தற்போது உள்ள ஒமைக்ரான் வைரஸ் கவலைக்குரிய மாறுபாடு. இது கடைசி உருமாற்றமாக இருக்காது.
அடுத்த உருமாற்றம் பெற வாய்ப்பு உண்டு. எனினும், அது பரவ சிறிது கால அவகாசம் எடுக்கும் என கூறியுள்ளார். மேலும், பிஏ.1 வைரசை காட்டிலும், பிஏ.2 வைரஸ் அதிகமாக பரவக் கூடியது. இந்நிலையில், ஒமைக்ரான் பரவல் உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது.
தற்போது கிட்டத்தட்ட உலக நாடுகள் அனைத்திலும் இது பரவி இருப்பதாக அவர் தெரிவித்தார். அதே நேரத்தில் இந்த வைரஸ் பரவலின் ஆரம்பத்தில் பாதிக்கப்பட்ட நாடுகளில் தற்போது கடந்த மாதம் முதல் இதன் பாதிப்பு குறையத் தொடங்கி உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.