இவர்களையும் ஒமைக்ரானின் புதிய மாறுபாடு தாக்க வாய்ப்பு!
கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் உள்ள உகான் நகரில் முதன்முதலாக பரவத் தொடங்கியது கொரோனா வைரஸ். அதன்பின், அதன் தீவிர பரவலால் உலகம் முழுவதும் பல நாடுகளுக்கும் வேகமாக பரவியது. இந்த கொரோனா வைரஸ் அவ்வப்போது உருமாற்றங்கள் பெற்று வருகிறது.
அந்த வகையில் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என குறுகிய காலத்தில் பல உருமாற்றங்களை அடைந்த கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு நவம்பர் 24ந் தேதி தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்தது. கொரோனாவின் உருமாற்றம் அடைந்த இந்த வைரஸ்க்கு ஒமைக்ரான் வைரஸ் (பிஏ.1) என பெயரிடப்பட்டது.
கொரோனா வைரஸை போன்று இந்த ஒமைக்ரான் வைரஸும் உலகம் முழுவதும் வேகமாக பரவியது. இந்த நிலையில் ஒமைக்ரானின் புதிய மாறுபாடு கடந்த மாதம் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டது. ஒமைக்ரானின் இந்த புதிய மாறுபாட்டுக்கு பிஏ.2 என பெயரிடப்பட்டது. இந்த ஒமைக்ரான் வைரஸ் மாறுபாடுகள் பற்றி டென்மார்க்கில் உள்ள ஸ்டேடன்ஸ் சீரம் இன்ஸ்டிடியூட்டின் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தி உள்ளனர்.
அந்த ஆய்வில், ஒமைக்ரான் வைரசின் வகைகளான பிஏ.1 மற்றும் பிஏ.2 ஆகியவற்றின் முந்தைய தொற்றின் பாதிப்புகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான மறுதொற்றுகள் காணப்படுகின்றன. பிஏ.1 தொற்றின் பாதிப்புக்கு பின்னர் ஏற்படுகிற இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியில் இருந்து பிஏ.2 தொற்று பாதிக்காமல் தப்ப முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிஏ.1 தொற்று பாதிப்புக்கு பின்னர் 187 பேருக்கு பிஏ.2 தொற்றின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 18 லட்சம் தொற்றுகளை ஆராய்ந்ததில் இது தெரியவந்துள்ளதாகவும், இதில் 67 பேருக்கு இருபது முதல் அறுபது நாள் வரையிலான இடைவெளியில் மறுதொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.