டேவிட் வார்னர் முச்சதம்: பாகிஸ்தானுக்கு இமாலய இலக்கு
ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நவம்பர் 29ஆம் தேதி தொடங்கிய நிலையில் முதல் நாளில் டேவிட் வார்னர் மற்றும் லாபிசாஞ்சே ஆகியோர் சதமடித்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இதையடுத்து இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தில் டேவிட் வார்னர் முதலில் இரட்டை சதத்தை அடித்து, அதன் பின் அதிரடியாக விளையாடி முச்சதம் அடித்தார். அவர் 39 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் 335 ரன்கள் எடுத்து தொடர்ந்து ஆட்டமிழக்காமல் இருந்தார்
அதேபோல் லாபிசாஞ்சே 162 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனை அடுத்து ஆஸ்திரேலிய அணி 127 ஓவர்கள் விளையாடி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 589 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. ஸ்டீவ் ஸ்மித் 36 ரன்களும், வேட் 38 ரன்களும் எடுத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
பாகிஸ்தான் தரப்பில் சாஹீன் ஆப்ரிடி மட்டுமே 3 விக்கெட்டுகளை எடுத்தார். மற்ற பந்துவீச்சாளர்கள் யாரும் விக்கெட்டுகள் எடுக்கவில்லை என்பது மட்டுமன்றி யாசீர் ஷா என்பவர் 32 ஓவர்களில் 190 ரன்கள் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இமாலய இலக்கை நோக்கி பாகிஸ்தான் பேட்டிங் செய்ய களமிறங்கியது. ஆனால் ஆரம்பத்திலேயே அந்த அணிக்கு அதிர்ச்சி காத்து இருந்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் இமாம்-உல்-ஹக் 2 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார்
இதனை அடுத்து தற்போது ஷான் மசூத் 8 ரன்களுடனும் அசார் அலி 5 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். தற்போது பாகிஸ்தான் அணி 9 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 15 ரன்கள் எடுத்துள்ளது
இன்னும் மூன்று நாள் ஆட்டம் இருக்கும் நிலையில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்ககுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்