திருப்பதியில் தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் இந்த தேதியில் வெளியீடு!

Photo of author

By Parthipan K

திருப்பதியில் தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் இந்த தேதியில் வெளியீடு!

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதையடுத்து, மாதத்திற்கு ஒருமுறை முப்பது நாட்களுக்கு தேவையான தரிசன டிக்கெட்டுகளை 300 ரூபாய் கட்டணத்தில் ஆன்லைனில் வெளியிட்டு விநியோகித்து வருகிறது திருமலை-திருப்பதி தேவஸ்தானம்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஒரு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அந்த அறிவிப்பில், இதுவரை இலவச தரிசனத்தில் தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் இதை மேலும் அதிகரித்து வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் 40 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதிக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தது.

மேலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இலவச தரிசனத்தில் பக்தர்கள் வழிபடுவதற்கு ஏதுவாக அன்றைய நாட்களில் வி.ஐ.பி தரிசனத்தை ரத்து செய்து இலவச தரிசன பக்தர்கள் வழிபட கூடுதல் நேரம் ஒதுக்கப்படுவதாக தெரிவித்திருந்தது. இந்த நிலையில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் இன்று இன்னொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில்,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுப்ரபாதம், அர்ச்சனை, கல்யாண உற்சவம் மற்றும் ஊஞ்சல் சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளை வருகிற ஏப்ரல் மாதம் 1-ந் தேதியில் இருந்து தொடங்க முடிவு செய்துள்ளது. இதையொட்டி ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களுக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட இருக்கிறது.

அதன்படி வருகிற 20-ந் தேதி (நாளை மறுநாள்) காலை 10 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் இதற்கான டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது. எனவே, பக்தர்கள் அதன்மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.