மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட ஹர்பஜன்சிங் தேர்வு!

Photo of author

By Parthipan K

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட ஹர்பஜன்சிங் தேர்வு!

சமீபத்தில் நடந்து முடிந்த உத்தரபிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 சட்டபேரவை தொகுதிகளில் 92 இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது ஆம் ஆத்மி கட்சி.

அதனை தொடர்ந்து கடந்த மார்ச் 16-ந் தேதி ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் மான் பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றார். இதன் காரணமாக பஞ்சாப் மாநிலத்தில் முதல் முறையாக ஆம் ஆத்மி ஆட்சி அமைத்துள்ளது. இதன்மூலம் டெல்லியை தொடர்ந்து தற்போது பஞ்சாப் மாநிலத்திலும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் காலியாக உள்ள 13 ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற 31-ந் தேதியன்று நடைபெற உள்ளது. அதில் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஏழு மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியும். அதன்படி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஏழு உறுப்பினர்களில் ஐந்து இடங்கள் காலியாக உள்ளன.

வேட்பாளர்கள் இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் ஆகும். இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சி சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன்சிங்கின் பெயர் இடம்பெற்றுள்ளது.