இனிமே கடைகளில் இதை பயன்படுத்தினால் அவ்வளவுதான்! தமிழக அரசு விடுத்த கடுமையான எச்சரிக்கை!

0
261

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது இந்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு பல்வேறு தீமைகள் எழுகின்றன என்று தெரிவித்து கடந்த 2019ஆம் வருடம் ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை எதிர்க்கும் விதமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை தொடரும் என்று தீர்ப்பு வழங்கியது.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் மறுபடியும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், பி டி ஆஷா, உள்ளிட்டோர் கொண்ட டிவிஷன் பெஞ்சில் விசாரணையிலிருந்து வருகிறது.

இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் சில விஷயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

அதாவது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியவர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கப் படுகிறது என்று தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்ததாக 167 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்றும், முதல் சோதனையில் கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவது தெரிய வந்தால் அபராதம் விதிக்கப்படுகிறது என்று சொல்லப்ட்டிருக்கிறது.

ஆனாலும் கூட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்காமல் தொடர்ந்து வந்தால் அந்த கடைகளுக்கு சீல் வைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலுமாக தடுப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளது என்று அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நீதிபதிகள் தெரிவித்ததாவது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படுகிறது என்று தெரிவித்தாலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்ந்து தாராளமாக கிடைத்து வருகின்றன.

அண்டை மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு பிளாஸ்டிக் பொருட்கள் வருவதையும், முழுவதுமாகத் தடுக்கும் விதத்தில் எல்லைகளில் சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்ற விழிப்புணர்வு வீடுகளிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்கும் விதத்தில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய, மாநில, அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்து விசாரணையை ஜூன் மாதத்திற்கு தள்ளி வைத்திருக்கிறார்கள் நீதிபதிகள்.

Previous articleகாஷ்மீரில் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் யார் தூண்டுதலின்பேரில் நடத்தப்பட்டது? பாஜக எம்பி பரபரப்புக் கேள்வி!
Next articleசீனாவில் மீண்டும் வேகமெடுத்த நோய்த்தொற்று பரவல்! பொழுதுபோக்கு பூங்கா மூடல்!