நாள்தோறும் இலங்கையை விட்டு வெளியேறி தமிழகம் வரும் மக்கள்!
இலங்கை கடுமையான வருவாய் இழப்பை சந்தித்து வருகிறது. இதனால் இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கையில் உணவு பொருட்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ளது.
வருவாய் இழப்பு காரணமாக இலங்கையில், நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் அங்கு தினமும் ஏழரை மணி நேர மின்வெட்டு அமலில் உள்ளது. இதனால் மக்கள் கடும் இன்னலை சந்தித்து வருகின்றனர். மேலும் அங்கு பள்ளிகளில் நடைபெறவிருந்த இறுதி பருவத் தேர்வுகள் இலங்கையில் நிலவி வரும் பேப்பர் தட்டுப்பாட்டின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இலங்கையில் நிலவி வரும் விலைவாசி உயர்வை சமாளிக்க முடியாமல் இலங்கை மக்கள் தமிழ்நாட்டிற்கு வர தொடங்கியுள்ளனர். அந்த வகையில் நேற்று முன்தினம் இலங்கையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தமிழகம் வந்தடைந்தனர்.
முறையான ஆவணங்களின்றி வந்த அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் தமிழகத்திற்கு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். அதுபோல் மேலும் பலர் இலங்கையிலிருந்து தமிழகம் வர திட்டமிட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து நான்காவது மணல் திட்டில் இலங்கையை சேர்ந்தவர்கள் இருப்பதாக தகவல் அறிந்து அங்கு சென்ற இந்திய கடலோர காவல் படையினர் அங்கு தவித்துக் கொண்டிருந்த இலங்கை தமிழர்கள் 6 பேரை மீட்டு பாதுகாப்பாக கப்பலில் ஏற்றி மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படை நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அதனை தொடர்ந்து அவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கினர். இந்த நிலையில் மேலும் 10 பேர் மன்னாரில் இருந்து தனுஷ்கோடி வருகை தந்து உள்ளனர்.