இன்று இரண்டாவது நாளாக தொடரும் வேலைநிறுத்த போராட்டம்!

0
126

இன்று இரண்டாவது நாளாக தொடரும் வேலைநிறுத்த போராட்டம்!

மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி இந்த வேலைநிறுத்த போராட்டமானது நேற்று (திங்கள் கிழமை) காலை தொடங்கியது. இரண்டாவது நாளாக இன்றும் இந்த வேலைநிறுத்த போராட்டமானது தொடர்ந்து வருகிறது. பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு பணியாளர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயம் ஆக்குவதை கைவிடுதல், பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரியை குறைத்தல், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டமானது நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை, மின்சாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் தொழிலார்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காப்பீடு மற்றும் வங்கி ஊழியர்கள் போன்ற பொதுத்துறை ஊழியர்களும் இந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக வங்கி பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. ஊழியர்கள் பெரும்பாலும் வேலைக்கு வராததால் வங்கி பணிகள் முடங்கி போயின. இதுபோல் பொது போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் போராட்டம் காரணமாக பெரும்பாலான அரசு பேருந்துகள் இயங்கவில்லை. குறைந்த அளவிலான தனியார் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. இதன் காரணமாக வேலைக்கு செல்வோர், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய மாணவ, மாணவிகள் அனைவரும் அவதியடைந்தனர்.

இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக இந்த நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டமானது தொடர்ந்து வருகிறது. நேற்று காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த வேலை நிறுத்த போராட்டமானது நாளை காலை 6 மணி வரை நடைபெற உள்ளது.

Previous articleநேற்று தொடங்கிய எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு! அதிர்ச்சியில் கல்வி அதிகாரிகள்!!
Next articleபொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை! இந்தியாவிடம் மேலும் கடனுதவி!!