சோறு திங்க நினைவிருக்கு! வரிகட்ட நினைவில்லையா? -தூத்துக்குடி மாநகராட்சி ஊழியர்கள் அடாவடி

Photo of author

By Anand

சோறு திங்க நினைவிருக்கு! வரிகட்ட நினைவில்லையா? -தூத்துக்குடி மாநகராட்சி ஊழியர்கள் அடாவடி

 

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீண்ட காலமாக சொத்து வரி, குடிநீர்வரி போன்ற மாநகராட்சிக்கு செலுத்தப்படாமல் உள்ள வரி பாக்கியினை செலுத்துமாறு மாநகராட்சி நிர்வாகம் சார்பாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியாக வரி பாக்கிகளை கட்டச் சொல்லி அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

 

இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி ஊழியர்கள் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று, ஆண்கள் பணிக்கு சென்றுள்ள நிலையில் பெண்கள் தனியாக உள்ள வீடுகளில் அத்துமீறி உள்ளே நுழைந்து வரி பாக்கியை கட்டச் சொல்வதும், மிரட்டல் விடுவதும் தனியாக இருக்கும் பெண்களிடம் அவதூறு பேசுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

“இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

 

இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட திரேஸ்புரம் பகுதியில் வரி வசூல் செய்து வரும் முருகானந்தம் என்பவர் அப்பகுதி பெண்ணிடம் வரிபாக்கியை கட்டச் சொல்லி உள்ளார். அதற்கு மறந்து விட்டோம் கட்டிவிடுகிறோம் என கூறிய பெண்ணிடம், “டெய்லி சோறு திங்க மறந்தியா? வரிகட்ட மட்டும் மறதி வந்துட்டா?” என கூறியுள்ளார். மேலும், தொடர்ந்து ஒருமையில் மரியாதைக் குறைவாக பேசியும், மிரட்டியும் வருவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

இதனால், அநேகர் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுவதாக கூறப்படுகிறது .

 

வரி பாக்கி உள்ள நபர்களை கண்டறிந்து மாநகராட்சி நிர்வாகம் சார்பாக பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள் சம்பந்தப்பட்ட நபர்களிடம் வரி பாக்கியை கட்ட அறிவுறுத்தி கட்ட வைக்கலாம் அல்லது மீறும் பட்சத்தில் இணைப்பை துண்டிக்கலாம் அல்லது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளலாம், ஆனால் அத்துமீறி நடப்பது எந்த விதத்தில் சரியாகும் என

சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

மாநகராட்சி ஊழியர் என்பதால் தனியாக இருக்கும் பெண்களிடம் அத்துமீறி வீட்டுக்குள் நுழைவதும், ஒருமையில் திட்டுவதும், மிரட்டுவதும் தொடருமேயானால் இது வன்முறையாக மாறவும் வாய்ப்பு உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

 

இதுபோன்ற மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்களை மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையர் விசாரணை மேற்கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

“பொதுமக்கள் மீது அக்கறை கொண்டு சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நினைக்கும் தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.