கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சைக்கு புதிய பதவி!
கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓவாக பணிபுரிந்து வரும் தமிழரான சுந்தர் பிச்சை அந்நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் என்ற நிறுவனத்தின் சி.இ.ஓவாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட கூகுள் நிறுவனம், இணையத்தில் தேடுதல் குறித்த சேவையில் உலகின் நம்பர் ஒன் நிறுவனமாக விளங்கி வருகிறது. தேடுபொறி என்றாலே கூகுள் தான் என உலகம் முழுவதிலும் உள்ள இண்டர்நெட் பயனாளிகளின் மனதில் பதிந்து விட்டது. அதுமட்டுமின்றி சர்வர் தொழில்நுட்பம், மென்பொருள் தயாரிப்பு, ஆண்ட்ராய்டு உள்ளிட்ட பல்வேறு சேவைகளையும் கூகுள் அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை செயல்பட்டு வரும் நிலையில் கூகுள் நிறுவனத்தை நிறுவியவர்கள் சற்றுமுன் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியபோது, கூகுளின் சிஇஓ என்ற பொறுப்புடன் சுந்தர் பிச்சைக்கு ஆல்பாபெட் நிறுவவனத்தின் சிஇஓ என்ற கூடுதல் பொறுப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு தமிழர் உலகின் நம்பர் ஒன் நிறுவனம் ஒன்றுக்கு சிஇஓவாக இருப்பது மட்டுமின்றி அதன் தாய் நிறுவனத்திற்கும் சிஇஓவாக நியமனம் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பதும், உலகத்தமிழர்களுக்கு இதுவொரு பெருமையான விஷயம் என்பதும் குறிப்பிடத்தக்கது
ஒருபக்கம் தமிழகத்தை சேர்ந்த இளைஞர் சண்முகம், நாசாவுக்கே வழிகாட்டியாக இருந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் சுந்தர் பிச்சையின் வளர்ச்சியால் தமிழர்களுக்கு உலகம் முழுவதும் அங்கீகாரம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.