முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவருடைய தோழி சசிகலா அதிமுகவை கைப்பற்றுவதற்கு பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தார்.
ஆனாலும் அவருடைய எந்தவித முயற்சியும் பலனளிக்கவில்லை, இதனால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கப்பட்டு முதலில் அந்த கட்சிக்கு சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.
அதன்பிறகு அந்த கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த தினகரன் பொதுச்செயலாளராக தன்னை நியமனம் செய்துகொண்டார்.
இந்த சூழ்நிலையில், மீண்டும் அதிமுகவை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளை அவ்வப்போது சசிகலா முன்னெடுத்து வந்தார்.
அதோடு அவர் சிறையிலிருந்து வெளியில் வந்த அந்த நொடியிலிருந்து அதிமுகவை கைப்பற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் இதுவரையில் அவருடைய முயற்சிகள் எதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை.
இந்த நிலையில், சசிகலா தமிழகம் முழுவதும் ஆன்மீக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இதற்கு நடுவில் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் 2 நாட்கள் சசிகலாவிடம் தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தியதாக சொல்லப்படுகிறது.
அந்த விசாரணையில் 100க்கும் மேற்பட்ட கேள்விகள் சசிகலாவிடம் கேட்கப்பட்டதாக தகவல் கிடைத்திருக்கிறது. சென்னையிலுள்ள அவருடைய இல்லத்தில் இந்த விசாரணையில் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், சசிகலா நேற்று சென்னையிலிருந்து திருச்சிக்கு புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அரசியல், கொடநாடு வழக்கு, உட்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சசிகலா ஆன்மீக பயணத்தை நிறைவு செய்த சூழ்நிலையில், மிக விரைவில் அரசியல் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளேன் அதிமுகவின் பொதுச் செயலாளர் வழக்கு குறித்து மிக விரைவில் மேல்முறையீடு செய்வேன் என்று தெரிவித்தார்.
அந்த சமயத்தில் கொடநாடு வழக்கு குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் அந்தக் கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். சென்னையிலிருந்து விமானம் மூலமாக திருச்சிக்கு வந்தடைந்த சசிகலா திருச்சி விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
அந்த சமயத்தில் அவரிடம் தங்களுடைய அரசியல் பயணம் தனியாகவா? அல்லது கூட்டணியுடனா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு சசிகலா நேரடியாக பதிலளிக்க மறுத்துவிட்டார்.
அதோடு பொறுத்திருந்து பாருங்கள் என்று தெரிவித்துவிட்டு அங்கிருந்து செல்ல முயன்றார். அதோடு உங்களை வரவேற்க வரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் டிடிவி தினகரன் கட்சியை விட்டு நீக்கி விடுகிறார்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர் நான் கோவிலுக்கு செல்கிறேன் இதுகுறித்து பிறகு பதிலளிக்கிறேன் என்று தெரிவித்து விட்டு சென்றுவிட்டார் என சொல்லப்படுகிறது.