இந்தியாவில் தொடர்ந்து வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்து வருகிறது. ஏற்கனவே பலமுறை வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தற்சமயம் வரையில் 965 ரூபாய்க்கு ஒரு சிலிண்டர் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை இன்று மேலும் 50 ரூபாய் அதிகரித்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன. இதன் காரணமாக, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 1,015 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் விலை உயர்வில் இருந்து வருகின்றன. இந்த நிலையில், தற்போது சிலிண்டரின் விலையை மேலும் அதிகரித்திருப்பதால் இல்லத்தரசிகள் கடுமையான அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றன.
திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் சிலிண்டரின் விலை குறைக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. ஆனால் அது தொடர்பாக ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் கடந்த பிறகும் இதுவரையிலும் எந்த விதமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில், சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 2,508 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இந்த விலை உயர்வு காரணமாக, பயனாளர்கள் மிகுந்த அதிர்ச்சிக்காளாகியிருக்கிறார்கள்.